ராஜம் கிருஷ்ணன்
21
"அக்கா நேத்து ரெண்டு கிலோ ஜிப்சம் மணலில் கலந்து நாத்தங்காலுக்குப் போட்டீங்க...”
“பின்ன? விதை செய் நேர்த்தி செய்து நாற்றங்கால் போடலே. இது சும்மா அப்படியே போட்டது. ஆனா, மத்ததெல்லாம் கரெக்டா பாத்துட்டு வாரேன். நடவு வயலில் இரவு நீர் பாய்ந்திருக்கிறது. காலையில் உழவோட்டி இருக்கிறான்.”
சாந்தி தொழு உரம், சாணி உரம், மணல், பொட்டாஷ், யூரியா, ஜிப்சம், அஸோஸ்பைரில்லம் எஞ்சிய பாக்கெட் எல்லாம் கலந்து, சேலையைத் தூக்கிச் செருகிக் கொண்டு விசிறுகிறாள். செவந்தி பாதியும், இவள் பாதியுமாக இதை முடித்து விடுகிறார்கள்.
பிறகு, முளைகளை எட்டடிக்கு ஒன்றாக நடுகிறார்கள். அதில் கயிறைக் கட்டுகிறார்கள்.
கயிறோரமாகக் கோடு போட்டாற் போல் சாந்தியும் செவந்தியும் நாற்றுக்களை வைத்துக் காட்டுகிறார்கள்.
“அஞ்சாறு எடுத்துக் குத்துக் குத்தா வைக்க வேணாம் ஆயா? ரெண்டோ மூணோ போதும்...”
இடையில் ஒரடி விட்டு மீண்டும் எட்டடிப் பாத்தி. முளை அடித்துக் கயிறு கட்டுவதில் கன்னியப்பனும் பங்கு கொள்கிறான்.
“இது எதுக்கு இப்படி? வருசா புடிச்சி குத்துக் குத்தா வச்சிட்டு வந்தா பத்தாதா?" என்று பாட்டி முணுமுணுக்கிறாள்.
"இல்ல ஆயா, இப்ப ஒரடி உடறதால, இடையில நிக்க, பாக்க எடம் இருக்கும். நாத்த, பயிரமுதிக்க வேணாம்.”
கிடுகிடென்று எட்டடிக்குள் நாற்றுக்களை விரைவாக அம்சு வைக்கிறாள். “இருங்க. இருங்க!” என்று செவந்தி சைகிள் டயரைக் கொண்டு வந்து நட்ட பயிர்களிடையே போடுகிறாள். உள்ளே எண்ணுகிறாள். இருபது குத்துகள் இருக்கின்றன.