ராஜம் கிருஷ்ணன்
231
வாராம இருக்கும்னு நா அதுவும் இதுவும் ஏன் நினைக்கணும்.” செவந்தி திகைத்துப் பார்க்கிறாள்.
அவளைப் பாத்து மன்னிப்புக் கேக்காம நெஞ்சு ஆறாதுன்னு கரைந்து போன அப்பனா?
சுருக்கம் விழுந்த இந்த முகத்தில்... இதுதான் தெளிவா?
"செவந்தி, உங்கிட்ட ரங்கன் சொல்லல. ஆனா முருகனுக்கு வந்த நோவு, இரைப்பை புத்துன்னு சொன்னா கெடந்து துடிச்சே. அந்தப் பொண்ணு அவ்வளவு நொடிச்ச பொண்ணு, சொத்து சொகம் நகை நட்டு எல்லாம் தோத்து, சாவித்திரி போல யமங்கிட்ட வாதாடி அவ உசிரை மீட்டிருக்கு. இப்ப நல்லா குணமாயிட்டது. சோதிச்சிச் சொல்லிட்டாங்கன்னாங்க... என்னமோ எல்லாம் அந்தத் தாயின் கிருபைதான்.”
"சாமி சொன்னாங்க. கெட்டவங்கன்னு யாருமே இல்ல. பகை வெறுப்பு பொறாமை பழி எல்லாம் மனிசனே உண்டாக்கிக் கொள்ளும் கசடுகள். மாயைகள். இதெல்லாம் நீக்கிவிட்டா, உள்ளேருந்து தண்ணிர் கரும்பா வரும். எல்லார் மனசிலும் அதாம்மா...” அப்பா அவள் தலையில் பரிவுடன் கையை வைக்கிறார்.
“உனக்கு நல்ல மனசு. அவ மக ருக்குவுக்கும் அந்தப் புள்ளங்களுக்கும் நல்லது செய்யி. படிக்க வையி, நீ செய்வே. இதுக்கு மேல எனக்கு என்னம்மா வோணும்?”
உணர்ச்சி மிகுதியில் நெஞ்சு முட்டுகிறது.
மனம் மிக இலேசாகிறது.
சரேலென்று வானம் மங்க... கோடையிடி முழங்குகிறது. “மழை ... மழை...” என்று எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறார்கள்.
செவந்தி ஏதோ நினைவு வந்தாற்போன்று விடுவிடென்று சாமியானாவை நோக்கி முன்னேறுகிறாள்.
♦