பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கோடுகளும் கோலங்களும்

அப்பா மெதுவாகச் சொன்னார். “நீ அபாண்டமா ராசாத்திய அடிச்சி வெரட்டிட்டே... எந்த சாமியும் மன்னிக்காது.”

“ஆமா, மன்னிக்காது! நீரு இத்தச் சொல்றீரு! அவ ரோக்கியமானவளா இருந்தா, அவள ஏன் வெரட்டணும்? சோத்துல பங்கு கொடுக்கலாம். எங்குடியில் பங்கு கொடுக்க மாட்டேன்".

“செங்கோலு அநாவசியமாப் பேசாத நாக்குப்புழுக்கும்!” என்று அப்பன் கத்துவார்.

“பாவி இன்னோவோ செய்திட்டுப் போயிட்டா...” என்று கையை நெறிப்பாள். புருசனுக்கு இளைப்போ இருமலோ வந்தால், உடனே யாரேனும் மந்திர தந்திரக்காரனிடம் போக வேண்டும் என்றுதான் அவள் நினைப்பாள். அம்சு மாமியார், இவளுக்கு எப்போதும் உடன்பாடானவள். இரண்டு பேருமாக, மந்திரக்காரர்களைத் தேடிப் போவதுமுண்டு. நூறு இரு நூறு செலவழித்துக் கழிப்பும் செய்திருக்கிறாள். அந்தப் பணத்துக்கு வீட்டில் சண்டை வரும்.

உறவுகள் விடுவதுமில்லை. இழைவதுமில்லை. இது இந்த வீட்டுக்குள், தெருவுக்குள் முண்டி முரண்டி சேர்ந்து இழையும். ஆனால் சின்னம்மாளைப் பொறுத்த வரையிலும் இந்த மண் அவளுக்குக் கசந்து விட்டது. உறவு அறுந்து போன மாதிரியே இருக்கிறது. அறுத்து விட்டார்கள். குற்றவாளி யார்?

"சாமி வந்திருக்கிறார். வீட்டுக்குக் கூட்டி வாரேன். வருவாரு...” என்று கூறிவிட்டு ரங்கன் சென்றிருக்கிறான்.

சாமி அப்படிக் கூப்பிட்டு வருபவர் இல்லை...

என்றாலும் தலைமுழுகி, சோறாக்கி, ஒரு காய் குழம்பு, பொரியல் செய்திருக்கிறாள். அரிசியும் வெல்லமும் பாலும் சேர்த்துப் பாயாசம் செய்திருக்கிறாள். பழம், வெற்றிலை, பூ, தேங்காய் எல்லாம் தயார்.

முற்றத்தில் இறங்கி வெயில் சுவருக்குப் போயாயிற்று.

இந்த சாமி ஒரு டாக்சியில் வந்து இறங்குகிறார்.