பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

33

இத்த எப்படீன்னாலும் எடுத்திடுங்க சாமி...”

“இதுக்கு ஒரு தாயத்து மந்திரிச்சித் தாரேன்... ஒரு நூத்தம்பது ஆகும். அதைக் கையிலோ கழுத்திலேயோ கோத்துக் கட்டிக்குங்க. வீரியமில்லாம போயிடும்.”

சாமி வந்திருக்கிறார் என்ற செய்தியில், அந்த வீட்டில் தெருவே கூடி விட்டது.

நீலவேனியின் புருசன், “சாமி, புதுசா தொழில் செய்யிறது பத்திச் சொல்லணும்...” என்று ஐம்பது ரூபாய் நோட்டை வைத்துவிட்டுக் கேட்கிறான்.

“தாராளமாகச் செய்யலாம். முயற்சி செய், முன்னுக்கு வருவாய்...”

“சாமி முன்னே துணி- எக்ஸ்போர்ட் பிஸினஸ் பண்ணி நஷ்டமாயிட்டது. இப்பவும் அதுபோல் செய்ய முதல் தேறல...”

சாமி சிரிக்கிறார். “முயற்சி செய்! முதல் வரும்...”

கன்னியப்பனின் ஆயாவும் கூட வருகிறார்.

“சாமி கன்னியப்ப கலியாணம் கட்டுன்னா வாணாங்கிறான். ஒரே பேரப் பய. அவனுக்கு ஒண்ணு கட்டி வச்சி, அது வயித்தில ஒரு குஞ்சப் பாத்துட்டுக் கண்ண மூடனும்..”

“ஆகும். ஆகும். அவனுக்கு நல்ல இடத்தில் பெண் வரும்...”

பாட்டி பதினைந்து ரூபாய் காணிக்கை வைக்கிறாள். காலனியில் இருந்து சாந்தியும், புருசனும் கூட எட்டிப் பார்க்கிறார்கள். ஆனால் எதுவும் கேட்கவில்லை.

சாமி சாப்பிடவில்லை.

“என்னைச் சுற்றி ஏழைப் பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் ஆக்கி வைத்தது வீணாக வேண்டாம் தாயே... இந்தப் பாத்திரத்தில் போட்டுக் கொடுங்கள்..”

கோ.கோ-3