34
கோடுகளும் கோலங்களும்
கையோடு கொண்டு வந்த தூக்குகளில் சோறு, குழம்பு, எல்லாம் போட்டுக் கொண்டு போகிறார்.
ரங்கனும், சாமியுடன் வண்டியில் ஏறிக் கொண்டு போகிறான்.
சரோவும், சரவணனும் பள்ளிக் கூடத்தில் இருந்து வந்து விட்டார்கள்.
“ஹை! பூசையாம்மா! வடை பாயசமா போடும்மா... பசிக்கிது.”
“வா சாந்தி, உங்கூட்டுக்காரரா? வாங்க உக்காருங்க! சுந்தரி, இவுங்களுக்குச் சோறு வையி...” என்று அனுப்புகிறாள். சாந்தியும், புருசனும் வாசல் திண்ணையில் உட்காருகிறார்கள்.
“நீங்க இந்தச்சாமியெல்லாம் நம்புவீங்களாக்கா?”
“அதென்னமோ. எங்கம்மா அப்பாக்கெல்லாம் இதுல நம்பிக்கை இருக்கு. எங்க வீட்டுக்காரர் கோயிலுக்குப் போவாங்க. இத, காஞ்சிபுரம் புரட்டாசி சனிக்கிழமைன்னாப் போவாங்க. ஆடிக் கிருத்திகை திருத்தணி போயிடுவாங்க. மச்சமாமிசம் ஏதும் ஊட்ல சமைக்கிறதில்ல. எங்க ஓப்படியா சுந்தரி இல்ல, அவ செய்வா. கவிச்சி கறி எதுனாலும் கொண்டிட்டு வருவா. அதும் எம் பொண்ணு சரோசா தொடாது...”
“அதுக்குச் சொல்லல. நாம சாமி கும்பிடணும். ஆனா, இப்படி தாடி வச்சிட்டுக் காருல வந்து அம்பது நூறுன்னு சனங்க மூடநம்பிக்கைய வளர்க்கிறவங்ககிட்ட சாக்கிரதையா இருக்கணும்க்கா. ஒருத்தர், எங்க நாத்தனார் வூட்டுப் பக்கம் இப்படித்தான் பூசை போடுறேன் தங்க நகை எதுனாலும் வையுங்கன்னு சொன்னாரு. கண்ணு முன்ன பூசை போட்டாங்க. அப்படியே எந்திரிச்சி போயிட்டாரு. ஆனா அடுத்த நா பூசை போட்ட எடத்துல வெறும் சின்ன சின்னக் கல்லுதா இருந்திச்சி. வளையலும் இல்ல, மோதரமும் இல்ல?”
“ஐயையோ!”