பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

39

செங்கோலுப் பாட்டி காதுல வந்து வுழுது!" என்று செவந்திக்குக் கேட்கத் தோன்றுகிறது.

அரும்பு மீசையைச் செல்லமாகத் தடவிக் கொண்டு முற்றத்தில் நிற்கும் கன்னியப்பனையும் பார்க்கிறாள். நல்ல உழைப்பினால் உரமேறிய உடல். வெள்ளை உள்ளம். இவனுக்குச் சரோவைக் கட்டினால் ஒத்து இருப்பானே?

"கன்னிப்பா! உனுக்குப் பெரிய எடத்துலந்து பொண்ணு வருதாம். உன் ஆயா, எப்பய்யா கலியாணம் கட்டிப்பா, அவன் கட்டி, ஒரு பேரப்புள்ளயப் பாத்திட்டுச் சாவணும்னு சாமி கிட்டப் புலம்பிச்சி. கவலப்படாதீங்க. கலியாணம் வருது, பெரிய எடத்துப் பொண்ணுன்னாரு....”

“பெரிய எடம்னா மாடி வூடா. உக்காந்தா பெரி.... எடத்த அடச்சிக்கிற எடத்துப் பொண்ணா?” சரோவின் கிண்டலுக்கும் அவன் வாயெல்லாம் பல்லாகச் சிரிக்கிறான்.

“அதென்னமோ தெரியாது, கன்னிப்பா, உன் கல்யாணத்துல எனக்கு பெரீ..... எல போட்டுப் பெரீ... சோறு போடணும்" என்று சரோ மேலும் நீட்டவே, கன்னியப்பன் மகிழ்ந்து போகிறான்.

“உனுக்கு இல்லாமயா சரோ? உனுக்குத்தான்முக்கியமாப் போடுவ....”

உள்ளே வரும் பாட்டி பட்டென்று வெட்டுகிறாள். "போதும், ஒரு வரமுற இல்லாத பேச்சி. பாயசம் குடிச்சாச்சில்ல? எடத்தக் காலி பண்ணிட்டுப் போ!"

“அவம் மேல ஏனிப்பக் காயுற? சிறுசுங்க கேலியும் கிண்டலுமா பேசிட்டுப் போவுதுங்க! நீ முதல்ல எந்திரிச்சிப் போ” என்று செவந்தி விரட்டுகிறாள்.

இந்த அம்மா, அப்பனை விட்டு அங்கே இங்கே நகருவதில்லை. அவர் வெளியே போனால், இவளும் சேலைத் தலைப்பை உதறிக் கொண்டு அங்கே இங்கே வம்பு பேச, டி.வி பார்க்க என்று கிளம்பி விடுவாள். வீட்டில் வணங்கி ஒரு வேலை பொறுப்புடன் செய்தாள் என்பதில்லை. அந்தக் காலத்தில், செவந்தி சிறியவளாக இருக்கையில், ஆண்