உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

41


படிக்கச் செல்கையில் சின்னம்மா அவளை அதுவரையிலும் கொண்டுவிட்டு கொல்லைமேட்டுப் பூமியைப் பார்க்கப் போவாள். ஒரு நாள் மழை வந்து விட்டது. முருகனிடம் குடையைக் கொடுத்துவிட்டு இவளைத் தூக்கிக் கொண்டு வந்தாள். செல்லியம்மன் கோயில் பக்கம் வருமுன் மழை கொட்டு கொட்டென்று தீர்த்து விட்டது. கோயிலில் ஏறிக் காத்திருந்தார்கள். அடுத்த நாள்முருகனுக்குக் காய்ச்சல் வந்து விட்டது. அம்மா சின்னம்மாவைத் திட்டித் தீர்த்தாள்.

அப்போது சின்னம்மாவுக்குப் புருசன் இருந்தான். கல்யாணமான ஆறுமாசத்துக்குள் வண்டியில் மூட்டை ஏற்றிக் கொண்டு அவன் இரவில் சென்ற போது, எதிரே வந்த லாரி கண்டு மிரண்டு மாடுகள் சாய, வண்டி குடை கவிழ்ந்து அவனுக்குக் கால் உடைந்து விட்டது. அது சரியாகவே இல்லை. அவனுக்குச் சொந்த பந்தம் என்று மனிதர்கள் இல்லை. நிலம் துண்டுபடக் கூடாது. இரண்டு பெண்களும் மருமகன்களும் ஒன்றாக உழைத்துச்சாப்பிடவேண்டும் என்று பாட்டன் நினைத்திருந்தார். ஆனால் அவனுக்கு விபத்து நேர்ந்து, ஊனமாய், சோற்றுக்குப் பாரமாக உட்கார்ந்தான் என்பதால் சின்னம்மாஅம்மாவுக்குத் தரம்தாழ்ந்து போனாள்.

அத்தைமகனான தன் புருசன் உரிமைக்காரன்; உழைக்கிறான். அதுமட்டுமில்லை, தான் முதலில் ஒர் ஆண் பிள்ளையைப் பெற்றிருக்கிறோம் என்ற கருவம் அவளுக்கு உண்டு. இப்போதுதான் செவந்திக்கு இதெல்லாம் நன்றாகப் புரிகிறது. அம்மா வெளி வேலைக்குப் போனதே இல்லை. வீட்டு வேலையும் செய்ய மாட்டாள். அதுவும் சின்னம்மா புருஷனை இழந்த பிறகு, அவள்தான் முழு நேர வேலைகளையும் செய்தாள். அம்மா, இழை சிலும்பாமல், சேலை கசங்காமல், வெற்றிலை வாய் மாறாமல், குந்தி இருந்து வம்பளப்பாள்.

அந்தப் புருசன் மூன்று நாள் காய்ச்சல் வந்து இறந்து போனார். அப்போது சின்னம்மா முழுகாமல் இருந்தாள். சின்னம்மாவைச் சுற்றி வந்து எல்லோரும் மாரடித்து அழுதபோது, விவரம் புரியாமல் அவளும் கோவென்று அழுதாள். பெரியசாமி மாமன் அவளையும் முருகனையும்