பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கோடுகளும் கோலங்களும்


ஆதரவாகவே இருக்கிறான். கடையில் இருந்து வரும் போது, எது வாங்கி வந்தாலும் முதலில் அந்த வீட்டுக்குக் கொடுத்து விட்டே வருவான். சரோ, சரவணனுக்கும் வித்தியாசம் தெரியாது.

செவந்திக்கு இதெல்லாம் சந்தோசமே. ஆனால் சின்னம்மா விசயத்தில் இப்படி நடந்ததா?

இவள் அம்மாதங்கையை பரம விரோதியாக அல்லவோ பார்த்தாள். இங்கும் அரிசி உளுந்து ஊறுகிறது. செவந்தி கிணற்றில் நீரிறைத்து அரிசியைக் கழுவி உரலில் போடுகிறாள்.

சரசரவென்று மழை விழுகிறது.

கொட கொடவென்று செவந்தி உளுந்து ஆட்டுகிறாள்.

“அம்மா! அம்மா! முத்தத்துக் கொடித் துணிய எடுத்து வையி! எரு மூட்டை நனையும். நான் பார்க்கலன்னா ஆரும் பார்க்கமாட்டாங்க...! அம்மா...! ஏ. சரோ?”

இந்தத் தாழ்வரையே அங்கங்கு ஒழுகுகிறது. ஓரத்தில் விறகு அடுக்கி இருக்கிறாள். அதுவே நனையும்.

“சரோ இந்த வெறகக் கொண்டு சமையல் ரூமுல வையி..”

சரோ வரவில்லை. அவள் வீட்டிலேயே இல்லை. சுந்தரி வீட்டுக்குப் படிக்கப் போயிருப்பாள். சரவணன் படிக்க மாட்டான். தெருவிலோ, எங்கோ நாலு பிள்ளைகளுடன் எதானும் விளையாடிக் கொண்டிருப்பான். அம்மாதான் முணமுணத்துக் கொண்டு வருகிறாள்.

பத்தி நடவுக்கு எடுத்துப் போன டயர் கிடக்கிறது. அதை எடுத்து வீசுகிறாள். எரு முட்டை எல்லாம் நனைந்து விட்டது.

மாட்டுக் கொட்டிலும் கூடச் செப்பனிடவேண்டும். பசு சினையாக இருக்கிறது.

மழை வந்தது பயிருக்கு நல்லது...