உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.இந்த நாவல்

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இன்று உலக அரங்கில் வேகமாக முன்னேறி நின்றாலும் இந்தியா ஒரு விவசாய நாடே!

தமிழகமும் தன் பங்கைத் தொடர்ந்து இத்துறையில் ஆற்றி வருகிறது.

ஆனால், பிற விவசாய நாடுகளைப் போல் அறிவியல் அதி நுட்ப வழி முறைகளையும் தொழில் நுட்ப சாதனங்களையும் விவசாயத்தில் பயன்படுத்த இந்தியா முழு வேகத்துடன் முயலவில்லை.

பொருளாதாரச் சிக்கலும், முற்போக்கு அறிவியல் விவசாயக் கொள்கைகள், கடைப்பிடிக்கப்படாமையும் முக்கிய காரணங்களாகும்.

பரவலான கல்வி அறிவு தந்து விட்டோம் நாம். ஆனால் விவசாயத் தொழில் நுட்ப அறிவைப் பெருமளவில் அதன் செயல்பாட்டுத் தளத்திற்குக் கொண்டு செல்வதில் அதிக அக்கறை அரசுகளுக்கு இல்லாமல் போனது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்நிலையில் இந்திய விவசாயிகட்குப் பட்டறிவை வளர்க்க முயன்று வருகின்றன. அதை அறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வர நாவலசிரியை திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் முயன்றார்கள். முதலில் இவ்விஷயத்தை நாவலாக்க இயலுமா என்ற சந்தேகம் என்னுள் எழுந்தது. ஆனால் இந்நாவலை முழுவதும் படித்து முடித்த பின் அந்தப் படைப்பாளியின் படைப்புத் திறன் பற்றியும் சமூக அக்கறை பற்றியும் மிகுந்த பெருமிதம் கொள்ள முடிந்தது.

யதார்த்தம், முன்-பின் நவீனத்துவம் என்றெல்லாம் பறை சாற்றிக் கொண்டு பட்டாசு வெடிச் சத்தங்களுக்கிடையே இங்கு படைப்புக்கள் உலா வருகிற இந்த வேளையில், ஆரவாரமற்ற, அழுத்தமான நடப்பியல் நாவல் ஒன்று தன் முழு வீச்சுடன், கன பரிமாணத்துடன் கம்பீரமாய் இதோ நிமிர்ந்து நிற்கிறது உங்கள் கரங்களில்.