பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கோடுகளும் கோலங்களும்

“சமில் ரூம்புல உமக்கென்ன வேல? தாய்ப் பால் இல்லன்னா, இந்தச் சனியனுக்கு, ஊட்டுப் பால் குடுக்கணுமா? இது யார் குடியக் கெடுக்குமோ? ஒடஞ்ச நொய்யிருக்கு, கஞ்சிகாச்சி ஊத்தட்டும். ஆம்புளப்பைய, அவம் படிச்சிட்டு வாரான். அவனுக்கு நல்ல பாலில்லை.” என்று தொடுத்தாள்.

“ஏ மூதேவி வாய மூடுடி! உங்கூடப் பிறந்தவதான அவ! இந்த வூடு, காணி எல்லாத்திலும் அவளுக்கும் பாதி உண்டுடி! நீ இப்பிடி வஞ்சன பண்ணாதே. உன் வமுசமம் அழிஞ்சிடும்” என்று அப்பா கத்தினார்.

“இன்னாது? பாதி உண்டா. பாதி? அத்த அவ புருசன் வூட்ல போயிக் கேக்கச் சொல்லுங்க! ஒராம்புளப் புள்ளயப் பெத்துக்காதவ, புருசனும் போனப்புறம் எந்தப் பாதிய நினைச்சிட்டுப் பேசுறீய பாதியாமே பாதி! பன்னாட...” என்று பேசுவாள்.

குழந்தைக்கும் கழுக்கட்டையில் சிரங்கு, மண்டையெல்லாம் கட்டி. அனல் காய்ந்தது. அம்மாவைப் பொருட்படுத்தவில்லை. அப்பாதான் அவளையும், குழந்தையையும் காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார். நாலைந்து மாசம் வீட்டுக்கு வரவேயில்லை.

வேலூர் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனதாகவும், குழந்தைக்கு ரொம்ப சீக்கென்றும் தெரியவந்தது.

அப்போதெல்லாம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் எப்போதும் சண்டைதான். வீட்டில் வேலை செய்ய ஆளில்லை. அப்பாவின் அம்மா அந்தப் பாட்டி வேறு இங்கு வந்திருந்தாள். ஒரு மார்கழி மாதத்தில், பாட்டிக்குக் காலரா வந்தது. செத்துப் போனாள்.

சின்னம்மா குழந்தையுடன் ஒரு வருசம் கழித்துத் திரும்பி வந்தாள். அப்பாதான் கூட்டி வந்தார்.

செவந்திக்குச் சின்னம்மாவின்மீது அப்போதுதான் அதிகம் பிடிப்பும் பாசமும் வளர்ந்தது.