பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

63

குழந்தை அழகாக இருந்தது. சுருட்டை முடி, பெரிய கண்கள். ஆனால் குச்சிக் கால்களும், கைகளுமாக இருந்தது. பிடித்துக் கொண்டு நிற்கும், நடக்க வரவில்லை.

“சீ, விடுடீகீழ? சீக்குப்புடிச்சத இங்க கொண்டிட்டு வந்து குலாவுற. அது கண்ட எடத்திலும் பேண்டு வைக்குது. மூத்திரம் போவுது” என்பாள்.

சின்னம்மாள் பொறுத்தாள். எத்தனையோ பொறுத்தாள். ஒரு நாள் செவந்தி ஸ்கூல் விட்டு வந்த சமயம் சின்னம்மா இல்லை. அவளுக்கு யாருடனோ தொடிசாம். குழந்தையை ஆஸ்பத்திரியில் கொண்டு காட்டுகிறேன் என்று சொல்லி ஓடி விட்டாளாம். கொல்லை மேட்டில் மணிலாக் கொட்டை போட்டுக் கடலை பிடுங்கி இருந்தார்கள். கடலை வறுத்து உடைத்து, வெல்லம் போட்டு உருண்டை பிடித்துக் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் போது கொடுத்திருந்தாள்.

திரும்பி வந்தபோது அவள் இல்லை.

நடுவில் எத்தனையோ சம்பவங்கள். முருகன் படித்து முடிந்து, வேலை நிரந்தரம் என்று நிலைக்காமல் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை என்று அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தான். வீட்டோடு மருமகன் வந்த புதிது. கொஞ்ச நாட்கள் சீட்டுக்கம்பெனி வேலை செய்தான். இரண்டாவதாக இவள் கருவுற்றிருந்தாள். இப்போதும் வளையல் அடுக்கி இருந்தார்கள். திடுமென்று சின்னம்மா மகளை அழைத்துக் கொண்டு ஒரு நாள் பகலில் வந்தாள்.

முதலில் ஒன்றுமே புரியவில்லை. மகள் குச்சியாய் பாவாடை தாவணி போட்டுக் கொண்டிருந்தது. பம்மென்ற சுருட்டை முடியை ஒரு நாடா போட்டுக் கட்டியிருந்தது. அழுதழுது முகம் வீங்கி இருந்தது. சின்னம்மாவும் குச்சியாகத்தான் இருந்தாள்.

"வாங்க சின்னம்மா... வாங்க..... என் கல்யாணத்துக்குக்கூட நீங்க வரவில்லை. இப்பவானும் வந்தீங்க...”

சுந்தரியின் அம்மா அப்போது அங்கு வந்திருந்தாள். அம்மா அங்கே பேசப் போயிருந்தாள். அடுப்பில் குழம்பு