பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

65

பதனமா இருக்கட்டும். நெருக்கடி. பாடி, பரதேசின்னு நினைச்சிட்டுப் பாத்துக்கிங்கன்னு சொல்லிச்சம்மா. நீ வீணா கத்தாத...” என்றாள் செவந்தி.

"ஊஹூம்... பாடி பரதேசியா? ஏண்டி, நானும் தெரியாமதா கேக்குறேன். ஆளான பொண்ண இங்க எதுக்குடி கொண்டாந்து வுடுறா? அடி சக்களத்தி. இப்ப என் மவளுக்குச் சக்களத்தியாக் கொண்டாந்து வுடுறாளா? போடி, இந்த நிமிசமே இங்கேந்து போங்க! இந்த வூட்டு மனுசன் வந்திட்டா அது வேற புள்ளைய அணச்சிட்டுக் கொஞ்சும்!”

ருக்கு... ஓ... என்று அழத் தொடங்கி விட்டது, பிழியப் பிழிய...

"ம், பைய எடு, நட...!"

“யம்மா, உனக்கே நல்லா இருக்கா? உன் பொண்ணுக்கு, புள்ளக்கி ஒரு கட்ட நட்டம் வராதா? என்னம்மா இது...”

“அடி நாம் பெத்த மவளே! உனக்கு என்னடி தெரியும், இந்தச் சூதெல்லாம்! அப்பந் தெரியாத பொண்ண எவங் கெட்டுவா; அதாஇங்க கொண்டாந்து எளிசா வுட்டுப் போட்டு ஒடிருக்கா ஏய், நட... போ!’

அடித்து விரட்டாத குறையாகப் பிடித்துத் தள்ளி விட்டாள். அது அழுது கொண்டே போயிற்று.

செவந்தி கத்தினாள். அப்பா வந்ததும் அம்மாளின் அக்கிரமத்தைச் சொல்லி ஏற்கெனவே எரியும் நெருப்பில் நெய்யூற்றினாள்.

அப்பன் ஆத்திரத்தில் அன்று குடித்து விட்டு வந்தார். அம்மாவைப் போட்டு அடித்தார். தெருவே கூடிச் சின்னாத்தாளைப் பேசிற்று. நாவில் பல் படக் கூசாமல், சின்னம்மா வேலூருக்குச் சென்று வயிற்றுப் பிள்ளையைக் கரைத்தாள் என்றும், அவள் புருசனில்லாத வாழ்வில் வளர்ந்த பெண் தடையாக இருப்பதாக இங்கு கொண்டு தள்ளி இருப்பதாகவும் பேசினார்கள்.

அத்துடன் விஷயம் ஒயவில்லை.