74
கோடுகளும் கோலங்களும்
அவள் அதைப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போகிறாள்.
காச நோயைக் கட்டுப்படுத்தச் சிகிச்சைப் பற்றி யாரோ பேசுகிறார். சாந்தியிடம்தான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறாள். ஒரு பக்கம் வெட்கமாகவும் இருக்கிறது.
காலையில் ரங்கனும் குளித்துத் திருநீறு பூசிக் கொண்டு வருகிறான்.
“இட்டிலி வேவுது... தட்டிட்டு காபி தாரேன்...”
“இன்னிக்கித் தீபம் இல்லியா? நீ காபி குடு. நா மலைத்தீபத்துக்குப் போறன். இட்டிலி வாணாம். விரதம்...”
“அட செத்த இருங்க; நா இங்க சாமி கும்புட இருக்கிற... நீங்க மலைத் தீபத்துக்குப் போறங்கறீங்க?”
அவளுக்கு உள்ளுரக் கோபம்.
காபித்துளைப் போட்டு, கொதி நீரை ஊற்றி வைத்திருக்கிறாள். நாலைந்து தம்ளருக்குக் கலக்குகிறாள். ஒரு தம்ளரில் ஊற்றி அவனிடம் கொடுக்கிறாள்.
“வூட்ட சாமி கும்பிடறப்ப, நீங்க போகணுமாங்க?”
“தா, நா முன்னமே தீர்மானிச்சாச்சி. நாலஞ்சி பேரு போறம். நீ இப்ப வந்து மறிக்காத நீ சாமி கும்புடப் போறன்னு எனக்கெப்படித் தெரியும்? புரட்டாசி சனி, சாமி கும்புட்டியா? தீபாளி ஆதும் ஒடிப்போச்சி. ஒரு துணி கூட எடுக்கல. புள்ளங்களுக்குத்துணி எடுத்து, ஸ்வீட்டும் காரமும் நாவங்கிட்டு வந்தே. அமாசக் கூட்டம், சாந்தி போடுறான்னு காலனிக்கு ஒடுற. அன்னக்கெல்லாம் கும்புடாத நோம்பு இன்னக்கா?”
“ஏங்க கோச்சிக்கிறீங்க? நீங்க வந்து நூறு ரூபா நோட்டக் குடுத்து 'ந்தா செவுந்தி நாளக்கி நோம்பு கும்புடு'ன்னு சொன்னிங்களா? நானாக வயித்தக் கட்டி வாயக் கட்டி, வூட்ட எப்படியோ கவுரதியா நடத்திட்டுப் போற... நீங்க வந்து பாருங்க, கழனியில நல்லா கதிர் புடிச்சிருக்கு. சாமி கும்புடற...”
“சரி கும்புடு, ராவிக்கே வந்தாலும் வந்திடுவ!”