பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

77

“அதெல்லாம் ஆம்பிளங்கதா செய்வாங்க” என்றாள்.

"நீங்க, களையெடுப்பு, நடவு, அறுவடை எதற்கும் போக மாட்டீங்க? உங்களுக்குச் சொந்த நிலம் இருக்குன்னு தெரியாது?”

செவந்தி எட்டிப் பார்த்து, “அதெல்லாம் கூலிக்குப் போறதில்ல. எங்களுக்குள்ள நான் செய்வே... எங்கம்மா செய்யாது” என்றாள்.

“பின்னென்ன? ஏன் உள்ள போய் மறஞ்சுக்கறிங்க? உங்க பேரென்ன? வயசு?... கலியாணமாயி எத்தன வருசம், வீட்டுக்காரரும் பயிர்த் தொழில் செய்கிறவரா... எல்லாம் சொல்லுங்க, வாங்க!”

"அய்யய்யோ! அதெல்லாம் ஆம்புளகளைக் கேக்காம எப்படிச் சொல்றது? நீங்க யாருன்னு எனக்கென்ன தெரியும்?”

“நாங்களா? நாங்கல்லாம், தமிழ்நாட்டுப் பண்ணை மகளிர் திட்டம்னு ஒரு திட்டத்தைச் செயல்படுத்துபவர்கள். இதை டென்மார்க் என்ற நாட்டின் உதவியுடன் நம் அரசே நடத்துகிறது. நீங்கள் நடவு நடுகிறீர்கள். களையெடுக்கிறீர்கள், ஏன் அண்டை வெட்டுவதில் இருந்து அறுவடை வரை செய்கிறீர்கள். ஆனால் மொத்தமாகப் பார்த்தால், பெண்கள் பாடுபடுவதன் பலன் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போது, இந்த ஆபீசர் அம்மாக்கள், உங்களுக்குச் சிறு சிறு தொழில் நுணுக்கப் பயிற்சி வகுப்பு நடத்துவாங்க. பண்ணை வேலைசெய்யும் பெண்கள் சுயமாக நிற்க வேணும். வளமை கூடவேண்டும். நிறைய இடங்களில், தமிழ்நாடு முழுவதும், ஏன், இந்தியா முழுவதுமே மகளிருக்கு இந்தப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு நீங்கள் காசு ஒன்றும் கொடுக்க வேண்டாம். ஐந்து நாள் பயிற்சிக்கு வந்து போக நாங்களே ஒர் ஊக்கத் தொகை தருகிறோம். அஞ்சு மூட்டை எடுத்த வயலில் எட்டு மூட்டை காணலாம்...” என்று விரிவாகச் சொல்லிக் காகிதங்களைத் தந்தாள். ஊர், பேர், விவரம் எல்லாம் எழுதிக் கொண்டார். இவள் புருசன் கேட்டதும்,