பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈடுகட்ட புதிய வீரிய வித்துக்கள், பயிரிடும் முறைகள், நீர் நிர்வாகம், புதிய ரசாயன உரங்கள் ஆகியவை, முன்னேற்றப் பாதையில் மக்களை வளமையை நோக்கிச் செல்ல வழி வகுத்திருக்கின்றன என்று சொல்லலாம்.

ஆனாலும், ஒரு சமுதாயத்தைச் சக்தி வாய்ந்ததாக இயக்க வல்ல பெண்களுக்கு இந்த வளமை பயன்பட்டிருக்கிறதா என்ற சிந்தனை குறிப்பாகத் தோன்றியிருக்கவில்லை எனலாம்.

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கும் பயிர்த் தொழிலைப் புறக்கணித்து, நிலமற்ற விவசாயிகளும், நிலம் உள்ள பெருந்தனக்காரரும் நகரங்களுக்கும் பெயர்ந்து வந்து, சுற்றுச் சூழலை மாசுபடுத்தி ஒரு நச்சுக் கலாச்சாரத்தைப் பரவ விடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற நிலையை எதிர் நோக்கத் தெம்பின்றி, பணமே பொருளாதாரச் செழிப்பு என்ற மாய மானை நோக்கிய மக்கள் நகர்ப்புறங்களில் நெருங்கினர்.

பெண்களின் சுயச்சார்பு, பொருளாதார சுதந்தரம் என்பதில் நகரங்களையும், நகர்ப்புறங்களையும் சார்ந்ததாகவே, அவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என்று கணிக்கப்பட்டது.

உண்மை நிலை என்னவென்றால், கிராமப்புறங்களில் விவசாய பயிர் உற்பத்தியில், மிகப் பெரும்பான்மையினராகப் பெண்களே ஈடுபட்டிருக்கின்றனர். இந்த உற்பத்தியில் மிக அதிகமான விழுக்காடு, பெண்களின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.

நிலத்தில் உழுவது ஒன்று தவிர, எருச் சுமந்து கொட்டுதல், அண்டை வெட்டுதல், விதைத்தல், நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல், தூற்றுதல், புழுக்குதல் என்று நெல்லை அரிசியாக்கிச் சோறாக்கிக் கலத்தில் இடுவது வரையிலும் அவர்களின் உழைப்பே பிரதானமாகிறது.

இவ்வளவு பொறுப்பைச் சுமந்து கொண்டு உழைப்பை நல்கும் பெண்களுக்கு, நிலத்தின் மீது பட்டா உரிமையோ, முடிவெடுக்கும் உரிமையோ இருக்கிறதா என்பதும் கேள்விக் குறி.

6