பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

83

“என்னம்மாது? ஒரு ரேடியோ இருந்திச்சி, அதையும் உடைக்கப் பண்ணிட்ட? அப்பா சமாசாரம் தெரியும். அவரை ஏன் கோவிக்கும்படி வைக்கிற?”

“என்னாடி அவரைக் கோபிக்கும்படி வச்சிட்டேன்? நான் என்ன பண்ணிட்டேன் சொல்லு? காபி கேட்டாங்க. இவன் சீட்டக் குடுத்தான். யாருன்னு பார்க்கப் போனேன். பொம்பிள்ளைனா அவ்வளவு கேவலமா? கோபிச்சிட்டுப் போனாப் போகட்டும்! நானும் மனுசிதா...” என்றாள். கண்ணீர் முத்துக்கள் சிதறின.

"நீ சரவணங்கிட்ட அந்தாள இருக்கச் சொல்லிட்டு முதல்ல அவரக் கவனிச்சிருக்கணும் அவருதா பஸ்ஸுல லோலுப்பட்டுட்டு வந்திருப்பாரு. கோவம், தலவலி...”

“அப்படி யாரு, நானா போகச் சொன்னே. நேத்து நா சாமி கும்புடணும் வூட்ல இருங்கன்னு சொன்ன தீபத்துக்குப் போற, நீ தனியா கும்புட்டுக்கன்னாரு...”

"நீங்க சண்டை போட்டுக் கோவிச்சிக்குங்க! எனக்கு ரேடியோ இல்ல. இப்படி உடஞ்சிருக்கு. இத்தயாரு ரிப்பேர் பாப்பாங்க! சீ. எனக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்ல..” என்று முகத்தைத் தூக்கிக் கொள்கிறாள்.

“அது என் ரூமில இருந்திச்சி. அத்த ஏன் சமையல் ரூமுக்குக் கொண்டாற? உழவருக்கு ஒரு வார்த்தையோ என்ன புரோகிராமோ, அங்க வந்து நின்னு கேக்க வேண்டியதுதான?”

“சரி. மன்னிப்பு. மாப்பு அறுவடை ஆவட்டும். முதல்ல உனக்கு ரேடியோ வாங்கித்தாறேன். கோபிச்சுக்காதம்மா.”

“அதுவரைக்கும்? எனக்குப் பரிட்சைம்மா, படிக்கணும்".

“சுந்தரி வூட்டுல ரேடியோ இருக்கு. சின்னம்மாதான, குடுப்பா, வச்சிக்க”.

“ஆகா! அவங்க வாலுங்கவுடுமா? ரேவதிக்குட்டி அவங்க வூட்டுப் பொருளத் தொட்டாலே பிடாரிபோல அழும். அந்தப் பய வரதன் வாசப்படில குறுக்க நின்னு மறிப்பா!"