பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

கோடுகளும் கோலங்களும்

அவன் பகல், இரவும் வரவில்லை. சரவணனை அனுப்பிக் கடையில் இருக்கிறானா, சாப்பாட்டுக்கு வரவில்லையா என்று அழைத்து வரச்சொன்னாள்.

“அப்பா கடையில் இல்லமா; முதலாளி டவுனுக்குப் போயிருக்காருன்னு சிவலிங்கம் சொன்னாரு...”

மாட்டுக்குப் புல்லறுத்து வருவோம் என்று கிளம்புகிறாள்.

மனசில் அமைதியே இல்லை.

வெற்றிலைக் கொடிக்காலில் இலை கிள்ளும் பழனியாண்டி, “திடீரென்று ஆயிசு முடிஞ்சிட்டவங்க போறாங்க...” என்று யாரிடமோ பேசுகிறான்.

யார்?

சின்னசாமி.. அகத்திக்கீரைப் பறித்துக் கொண்டிருக்கிறான்.

“யாருக்கு என்ன?”

"பஸ் கவுந்து போச்சாம்!”

ஐயோ? என்று நெஞ்சு குலுங்குகிறது.

“எங்கே?”

“திருவள்ளுர் பஸ்ஸாம். பிரேக் புடிக்காம மரத்தில மோதி, ரெண்டு பேர் செத்திட்டாங்களாம். நாகசாமி வாத்தியார் வந்து சொன்னாரு. அவரு அந்த பஸ்ல போக இருந்தாராம். மக திருவள்ளுருல குளிகுளிச்சிருக்காம். பஸ் தவறிப் போச்சாம்.”

புல்லறுப்பை விட்டாள். குலுங்கக் குலுங்க வீடு வருகிறாள்.

இவளே கடைவீதிக்கு ஒடுகிறாள்.

எந்த பஸ்... எங்கே போனானோ? திருவள்ளுரில் அவனுக்கு ஒன்றுவிட்ட அக்கா இருக்கிறாள். அவள் மகள் படித்து விட்டு டீச்சராக வேலை செய்தாள். அவளைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததுண்டு. ஆனால் அவர்கள் இவருக்குப் பெண் கொடுக்க இஷடப்படவில்லை.