பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீட்டோடு இருந்து, வீடு, கொட்டில் மாடு, பயிர் எல்லாவற்றையும் பேணுவதில் தன் வாழ்வையே ஈடாக்கும் பெண்ணுக்கு, விடுப்பு உண்டா? ஊதியம், ஊதிய உயர்வு, ஓய்வுக் கால ஆதரவு, போனஸ் என்ற சலுகைகள் பற்றியோ, பேறுகால, உடல் நோய் வரும் போதான மருத்துவ வசதிகளுக்குத் தேவையான உத்தரவாதம் பற்றியோ ஓர் அடிப்படை உணர்வேனும் உண்டோ?

பெண் என்றால், பெண்தான். எல்லா வேலைகளையும் செய்வது அவள் இயல்பு. அவ்வளவுதான்.

ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என்று சொந்தமாக நிலம் வைத்துக் கொண்டு பயிரிடும் குடும்பங்களில், தங்கள் நிலங்களில் வேலை செய்வது தவிர, இது போன்ற வேறு சிறு விவசாயிகளின் நிலங்களில் கூலி வேலையும் செய்கிறார்கள் பெண்கள்.

உழவு செய்யும் ஆண், ஒரு நாளைக்கு ஆறு மணி உழவோட்டி, ரூபாய் எண்பதிலிருந்து நூறு வரையிலும் கூலி பெறுகிறான். ஆனால் பெண்ணோ, அவள் வேலைக்கு ஊதியமாக, பதினைந்தில் இருந்து இருபது வரையிலும்தான் பெறுகிறாள்.

சம வேலை-சம கூலி என்பது விவசாயத் தொழிலைப் பொறுத்து ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கிறது.

அறுவடைக் காலத்தில் இருவரும் ஒரே வேலையைச் செய்தாலும், ஆணுக்குக் கூலி நெல்லுக்கு மேல் பணமும் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்ணோ, அதே அளவு நெல் மட்டுமே என்று கூலியாகப் பெறுகிறாள். பணம் கிடையாது.

இது கொஞ்சமும் சரியில்லையே, ஏன் இப்படி? நீங்கள் ஏனம்மா ஊதிய உயர்வு கோரவில்லை. போராடவில்லை என்ற கேள்விக்கு வந்த பதில் சிந்தனைக்குரியதாகும்.

ஐந்து ஏக்கர் வரை வைத்துக் கொண்டு தங்கள் நிலங்களில் தாங்களே வேலை செய்யும் சிறு விவசாயக்காரர்கள்-பெண்கள் ஒருவருக்கொருவர் என்று உதவிக் கொள்கிறார்கள். நிலமற்ற விவசாயக் கூலிகள்-பெரும் பண்ணை என்ற அளவில் போராட்டங்கள் நிகழ்கின்றன; தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் சிறு விவசாயிகள் பெண்கள் அத்தகைய போராட்டத்தை விரும்பவில்லை.

7