பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

89

சம்பாதிக்கிறார்கள். வருபவன் பத்து இருபது சவரன், வாட்ச், கட்டில், பீரோ, ரேடியோ, டி.வி. என்று கேட்கிறானே? சமர்த்தாக சீட்டுக்கட்டிப் பண்ட பாத்திரம் வாங்குகிறார்கள்.

இவளை இப்படி வளர்த்ததே தப்பு. கிறித்தவ ஸ்கூல், டீச்சர்கள்.. என்ன சொக்குப் பொடி போடுவாங்களோ? அப்பாவும் இல்லை, பாட்டியும் இல்லை. இவளை ஒரம் கட்டிவிட்டுப் போகிறாள். அந்த டீச்சர் வீடு எந்தத் தெருவோ? கிறிஸ்தவ டீச்சர் வீடென்றால் காலனிக் குப்பத்தில் மாதா கோயில். அங்கே வீடுகள் இருக்கின்றன. சைக்கிளில் போகவில்லை. அங்கிருந்து ராத்திரி எட்டுமணிக்கோ ஒன்பது மணிக்கோ தனியாக வருவாளா?

இளங்கன்று பயமறியாது. இளம் பெண்... ஊர் கெட்டுக் கிடக்கையில் என்னதான் நேராது? .

கன்னியப்பன் வருகிறானா என்று வாசலில் போய் நின்று பார்க்கிறாள். வருகிறான். அவன் மட்டுமே..

"ஏம்ப்பா? அவளக் கூட்டியான்னே, விட்டுப் போட்டு வந்திருக்க?”

“அது சொல்லிச்சி, ரொம்பப் படிக்கணுமாம். அம்மாக்கு நீ புரிய வை கன்னிப்பா. கணக்கு நாத்து நடுறாப்பல இல்ல. எல்லாரும், மாசம் நூறு நூத்தம்பது குடுத்து டூசன் வச்சிக்கிறாங்க. நான் அதெல்லாம் இல்லாம, கேட்டுப் படிக்கிறேன். டீச்சர்தா வரச் சொன்னாங்க. நேரமாயிடிச்சின்னா. அவங்க தங்கச்சியோட தங்கிட்டுக் காலம வருவேன். விசயம் புரியாம அம்மா ஒன்னு கத்துது... சொல்லுன்னு சொல்லிச்சி. அதும் நியாயந்தான்.”

"ஏ மடயா, என்ன நியாயத்தக் கண்ட? நீ கூப்புட்டு வருவேன்னு தானே உன்ன அனுப்பிச்சே? அன்னாட சம்சாரி வாழ்க்கைக்கு என்ன பெரிய படிப்பு வேண்டி இருக்கு? இவ படிச்சிட்டு உட்கார்ந்திருப்பா. இவளுக்கு மேல படிச்சவனுக்கு ரொக்கம் குடுக்க, கட்ட, எங்க போக?”

அவன் தலை குனிந்து கொண்டு நிற்கிறான். அவன் எதற்கு வந்தான் என்று கேட்கக்கூடத் தோன்றவில்லை.