பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

91

செத்தப்ப, அவ வந்தாளா? இப்ப எதுக்கு இவங்க போவணும்? நா சொன்னா எடுபடாது. அவ பேச்சிலியே இவங்க மயங்கிட்டாங்க.. உங்களுக்கும் நான் சொல்றேன். குடிக்கறத விட்டுப்போடுங்கன்னு..” என்று பேச்சோடு அவருக்கும் தைக்கும்படிச் சொல்லி வைக்கிறாள்.

“நான் குடிக்கல செவந்தி இன்னைக்கு? ஒங்கிட்ட நா ஏன் பொய் சொல்றே?”

சரவணன் சைக்கிளில் சுற்றி விட்டு வருகிறான். இருட்டிவிட்டது. விளக்கைப் போட்டுக்கும்பிடுகிறாள்.

“ஏண்டா, ரீட்டா டீச்சராமே? உங்கக்காவுக்கு.. அவ வீடு எங்கிருக்கு?”

“போஸ்ட் ஆபீசு பக்கத்துல இருக்கும் மா. தெரு திரும்பினதும் மேலத் தெருவுக்குப் போவமில்ல, நேராப் போனா, அண்ணா தெரு, மூணாம் வீடு...”

"அக்கா படிக்கப் போயிருக்கு. ஒம்பது மணிக்கு தாத்தாவக் கூட்டிட்டுப் போய் வுடு. அவ தாத்தாவக் கூட்டிட்டுத் திரும்பி வருவா!"

“நானே கூட்டிட்டு வாரம்மா.”

“ஒம்பது மணிக்கெல்லாம் வந்திடணும்! தாத்தா போனாத்தா அவ வருவா? முன்னப் பின்ன ஆனாலும்...”

அவனுக்குச் சைக்கிளை விட்டு விட்டு வர விருப்பம் இல்லை.

இரவு அங்கு தங்கினால் தங்கி விட்டுப் போகட்டுமே என்று இருக்கவும் மனம் கொள்ளவில்லை. இது எப்படியும் வெளியே தெரிந்து விடும். ஏற்கனவே இவள் சைக்கிளில் பள்ளிக்கூடம் செல்வதும் பையன்களுடன் பேசுவதும் ஏற்கும்படியாக இல்லை. பிறகு ஒன்றுமில்லாததற்குக் கண் வைத்து மூக்கு வைத்துப் பேசுவார்கள்.

இரவு பத்து மணிக்குப் பாட்டனும் பேத்தியும் திரும்பி விடுகிறார்கள் என்றாலும் சரோ பற்றி கவலை தனியாக அழுத்துகிறது.