பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

97

அத்தான் சாப்புட வந்தப்ப லெட்டர் வந்திருக்குன்னு சொன்னாங்க.”

“லெட்டரா? நாளப் பொங்கலுக்கா வராங்க? விசேசந்தா...”

“நா முதல்ல அறுப்பு வச்சது நல்லாப் போச்சு. புதுநெல்லு போட்டுப் பொங்கி, வாராத அண்ணனும் அண்ணன் பொஞ்சாதியும் வாராங்கன்னா விசேசந்தா.” பொங்கலுக்கு எப்படியும் துணி வாங்குவது வழக்கம். காஞ்சிபுரம் போய்க் குழந்தைகளுக்கும், அப்பாவுக்கும், வாங்க வேண்டும் என்றிருந்தாள். கோ - ஆப்டெக்ஸ் கடையில், ஒரு வாயில் சேலை எடுத்தால், சரோவை உடுத்தச்சொல்லலாம். அவர்கள் அப்பா அவளுக்கும், சரவணனுக்கும் வேண்டியதை எடுப்பார். அவள் தலையிட மாட்டாள். அவளுக்கும் ஏதோ ஒரு சேலை வரும். பொங்கல் தீபாவளி என்றால், முருகன் இருநூறு இருநூற்றைம்பது என்று பணம் அனுப்பி வைப்பான். இல்லையேல், அவன் மட்டும் பேப்பர் திருத்த, அது இதென்று பட்டணம் வரும்போது சுங்கடிப் புடவையோ, வேட்டியோ வாங்கி வந்து கொடுப்பான். அதற்கே அம்மா அகமகிழ்ந்து போவாள்.

பொங்கல் சந்தை அல்லவா? கோ - ஆப்டெக்ஸ் துணிக்கடையில் கூட்டம் அலை மோதுகிறது. செவந்தி கன்னியப்பனையும் கூட்டி வந்திருக்கிறாள். ஒரு சோடி வேட்டி நாற்பது நாற்பது ரூபாயில் இரண்டு சட்டைகள், ஒரு வாயில் சேலை, நான்கு ரவிக்கைத் துணிகள் என்று துணி எடுக்கிறாள். புதுப்பானை, நான்கு கருப்பந்தடிகள், வாழைப்பழம், ஒரு சிறு பறங்கிக் கொட்டை, பூசணிக்காய், கத்தரிக்காய், மொச்சைக் கொட்டை என்று வாங்கிக் கொள்கிறாள். சேவு அரைக் கிலோ, இனிப்பு கேக், ஒரு பெட்டி என்று பணத்தைச் செலவு செய்கிறாள்.

கன்னியப்பன் உடன் வர விடுவிடென்று நடந்து வீட்டுக்குள் நுழைகையில் வீடு கலகலவென்றிருக்கிறது. ரங்கன் மட்டும் வந்திருக்கவில்லை. அண்ணன் முருகன், அண்ணி, இரண்டு குழந்தைகள் வந்திருக்கிறார்கள். கயிற்றுக்