இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒளியின் துதுவனே வாழ்க பல்லாண்டு! (அணிந்துரை) கவிஞர் சிற்பி மீரா - கவிதைச் சுவைஞர்கள் நெஞ்சில் தேன் பிலிற்றும் ஒரு திருப்பெயர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் வகிர்ந்து கொண்ட ஆளுமை. மண்ணின் விளிம்புகள் வரை போகும் மனிதம். தோழமைக்காகக் கருத்துக்களை விட்டுக் கொடுக்காத துணிவு. முகம் தெரியாத இளம் கவிகளுக்கு முகவரி கொடுத்த தாய்மை. மழைத்துளிகளால் செய்த கவிதைச் சிற்பம். மாநிலத்தில் வேரோடி கப்பும் கிளையுமாய் விரிந்து கம்பீரமாய்த் தலைநிமிரும் உரைநடை வித்தகம். பாலுக்கு ஏங்காமல் தரமுயர்ந்த நூலுக்கு ஏங்கிய அன்னம். பத்தரை மாற்றுப் பதிப்புக்களுக்கு அடியெடுத்துத் தந்த அகரம். நிராசை முகில்களைக் கிழித்து நிமிர்ந்த சிகரம். விளைவுகளையும் விபரீதங்களையும் நெட்டித் தள்ளி விட்டு அயர்வறியாமல் உழைத்த உன்னதம்.