பக்கம்:கோயில் மணி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலக் குழப்பம்

99

திருவள்ளுவர்: ஆம், நேரமாகிவிட்டது; போய்வாருங்கள்.

[இருவரும் வணங்கிவிட்டுப் போகிறார்கள்.]

காட்சி—3

[வெளியே ஒட்டக்கூத்தர் பல்லக்கில் ஏறப்போகிறார். முறுக்கிய மீசையும் உருட்டிய கண்களும் கறுப்புச் சட்டையும் தலைப்பாகையுமாகப் பாரதியார் வருகிறார்.]

ஒட்டக்கூத்தர்: (அருகில் உள்ள ஒருவரைப் பார்த்து ) இந்த மனிதர் யார்? இவ்வளவு விறைப்பாக வருகிறாரே! கண்ணைப் பார்த்தால் விளக்குப் போல ஒளி வீசுகிறதே

அவர்: இவர் பாரதியார்; இவரும் ஒரு புலவர்.

ஒட்டக்கூத்தர்: அப்படியா? இவரிடமும் ஏதாவது கேட்கலாமே! ஐயா, உம்மைத்தான். நீர் புலவராமே? நான் கலைமகள் கோயில் கட்டுகிறேன். புலவர் பலரிடம் பொருள் தொகுத்துக் கட்டத் தொடங்கியிருக்கிறேன். உம்முடைய காணிக்கையாக ஏதாவது கொடுக்க முடியுமா?

பாரதியார்: (ஏற இறங்கப் பார்க்கிறார்,) நீர் எந்த ஊர் ராஜா?

ஒட்டக்கூத்தர்: நான் அரசன் அல்லன்; சக்கரவர்த்தி; கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.

பாரதியார்: (சிரிக்கிறார்.) அப்படிச் சொல், பாண்டியா! சபாஷ்! உன் செயலை மெச்சினேன், (தலைப்பாகையை அவிழ்த்து நீட்டுகிறார்.) இந்தா, கலைமகள் கோயிலில் வேலை செய்யும் தொழிலாளிகளில் முதல்வனுக்கு, இது மகாகவிச் சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியின் சம்மா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/105&oldid=1384087" இலிருந்து மீள்விக்கப்பட்டது