பக்கம்:கோயில் மணி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவு

103

தலைமை ஆசிரியை. மாதம் 400 ரூபாய் சம்பளம் வருகிறது. பரீட்சை, பாடப் புத்தகம், அது இது என்று மேலே நூறு ரூபாய் வரும். பாவம்! அவளுடைய இந்த வசதியான நிலைமையைக் கண்டு களிக்க அவள் தந்தை இல்லை. ஆசிரியையாகி முதல் சம்பளம் வாங்கியதைத்தான் அவர் பார்த்தார். அதற்குமேல் தம் மகளுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று கண்ணை மூடினார். அவளுடைய தாய் மட்டும் மேலே பத்து ஆண்டுகள் வாழ்ந்தாள். பர்வதம், பர்வதம் என்று அடிக்கொரு தரம் கூப்பிட்டு வேண்டியதை வாய்க்கு இனியதாகத் தன் பெண்ணுக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். “அந்தப் பெயர் வேண்டாமே! குமாரி என்று கூப்பிடேன்” என்பாள் மகள். “ஆமாம். குமாரி என்ன? குழந்தை என்றே கூப்பிடலாம்!” என்று தாய் கூறுவாள்.

தன் கணவர் மறைந்தது சிறிது துயரத்தை உண்டாக்கினாலும் தன் மகள் சம்பாதிப்பதைக் கண்டு பெருமிதம் கொண்டாள், குமாரியின் தாய். ஆனால் அந்தப் பெருமிதத்தைக் குலைக்க அவளிடம் ஓர் ஆசை பிறந்தது. தன் பெண்ணின் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்து. அதைப் பார்த்துவிட்டுச் சாகவேண்டும் என்பது தான் அவள் ஆசை. இன்னும் கல்யாணமே ஆகவில்லையே! அதற்கு வழி உண்டான பிறகு தானே பிள்ளை பெறவேண்டும்?

முதலில் சாடை மாடையாகத் தன் கருத்தை அவள் தன் மகளிடம் சொல்லி வந்தாள்; “நீ பிள்ளையாகப் பிறந்திருந்தால் நான் நீ என்று பெண்கள் உன்னைத் தேடி வருவார்கள். இவ்வளவு நாளில் என் மடியில் ஒரு பேரக் குழந்தை தவழ்ந்து கொண்டிருக்கும். உன் வயசில் நான்........”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/109&oldid=1384094" இலிருந்து மீள்விக்கப்பட்டது