பக்கம்:கோயில் மணி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

கோயில் மணி

“அம்மா, இவனை ஆசீர்வாதம் செய்யுங்கள். உங்கள் பள்ளிக்கூடத்தில் இவனுக்கு இடம் கிடைக்காதே! இவன் ஆணாகப் பிறந்து விட்டானே!” என்றாள்.

“இருந்தால் என்ன? அடுத்தபடி வருகிற குழந்தையைச் சேர்த்துவிட்டால் போயிற்று!” என்றாள் குமாரி.

வந்தவள் முகம் முழுவதும் நாணம் பூத்துக் குலுங்கியது. அதில்தான் எத்தனை பூரிப்பு! “உங்கள் ஆசீர்வாதம் பலிக்கட்டும்” என்று மெல்லச் சொல்லிவிட்டு அவள் நழுவினாள். அவள் அப்போது கருவுற்றிருந்தாள் என்பதைக் குமாரி பிறகுதான் தெரிந்துகொண்டாள்.

இது இப்போது நினைவுக்கு வந்தது. ஆசி கூற நமக்கு என்ன உரிமை இருக்கிறது? பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்று பிறரை வாழ்த்தும் எனக்குக் குழந்தையைப் பற்றி என்ன தெரியும்? அவள் உள்ளத்தில் ஏதோ வெறுமை தோன்றியது.

அன்று கோயிலுக்குப் போயிருந்தாள். அம்பிகையின் சந்நிதிக்குப் போய்க் கொண்டிருந்தாள். கணவனும் மனைவியுமாக இரண்டு பேர், ஒரு குழந்தையோடு கோயிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். பெண் குழந்தை; எடுத்துக்கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள்.

கணவன், “இவளைச் சற்றே எடுத்துக் கொள்ளேன்” என்றான்.

“நீங்கள்தாம் சிறிது நேரம் இவளைச் சுமக்கக் கூடாதா ?” என்றாள் மனைவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/112&oldid=1384098" இலிருந்து மீள்விக்கப்பட்டது