பக்கம்:கோயில் மணி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவு

107

“குழந்தைச் சுமையெல்லாம் உன்னுடனே இருக்கட்டும். அதுதான் நியதி” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தான் கணவன். ஆனால் உடனே அந்தக் குழந்தையைத் தாவி எடுத்துக்கொண்டான்.

“எதற்கு எது பேச்சு?” என்று பொய்க் கோபத்தைக் காட்டினாள் அந்தப் பெண்.

இதைக் குமாரி பார்த்தாள். அவளுக்கு ஒரு கணம் ஒன்றுமே தோன்றவில்லை. உடம்பு குப்பென்று வியர்த்தது. தான் யாரும் இல்லாத பாலைவனத்தில் தன்னந்தனியே நிற்பதுபோலப் பட்டது. கோயிலுக்குக் கூடப் போகவில்லை. பேசாமல் வீட்டுக்கு வந்து தலைவலி என்று படுத்துக் கொண்டாள்.

அன்றுதான் அவளுக்குத் தன் வாழ்க்கையின் வெறுமை தெரிந்தது. அம்மாவின் வாயை அடைக்க அவள் எத்தனை பேசியிருக்கிறாள்! சுதந்தரம் என்றும், அடிமை வாழ்வென்றும், ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமென்றும், பெண்ணை ஆண் அடக்கி வாழும் வாழ்வுக்கு இடம் கொடுக்கக் கூடாதென்றும் அவள் பேசியிருக்கிறாள். மாலையில் கோயிலில் பார்த்த கணவன். மனைவி, குழந்தை என்ற மூன்று பேரையும் தன் உளக் கண்ணில் இப்போது கொண்டுவந்து நிறுத்திக்கொண்டாள். என்ன நிறைவான வாழ்க்கை! என்ன நுட்பமான அன்பு! அவளுக்கு அது புரிந்தது போலவும் இருந்தது; புரியாதது போலவும் இருந்தது. அவள் தன் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுதாள், விம்மினாள்; அப்படியே தூங்கிப்போய்விட்டாள்.

அன்று முதல் அவள் பார்வையிலேயே மாற்றம் உண்டாகிவிட்டது. சின்னஞ் சிறு குழந்தையைக் கண்டால் அழைத்து ஏதாவது கையில் கொடுப்பாள். அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/113&oldid=1384101" இலிருந்து மீள்விக்கப்பட்டது