பக்கம்:கோயில் மணி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

கோயில் மணி

போனவுடன் பெருமூச்சு விடுவாள். தாயும் குழந்தையும் சேர்ந்திருந்தால் கூர்ந்து பார்ப்பாள். கணவனும் மனைவியுமாகச் சென்றால் மறைந்து பார்ப்பாள்; குறிப்பாகப் பார்ப்பாள். தன் வாழ்வே சூனியமாகிவிட்டது என்ற உணர்ச்சி அவளிடம் தோன்றி வளரத் தொடங்கியது.

அவளுக்கு என்ன குறைவு? சொந்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறாள். நல்ல வேலை, மதிப்புக்கும் குறைவில்லை. ஆயிரத்தைந்நூறு பெண் குழந்தைகளும் அறுபது ஆசிரியைகளும் அவள் குடும்பம். மாதந்தோறும் கை நிறையப் பணம் வருகிறது. பாங்கில் நிறையப் பணம். இன்னும் என்ன வேண்டும்? சுதந்தரமான வாழ்வு. அவள் நினைத்தால் நினைத்ததைச் செய்யலாம். யாரையாவது கேட்க வேண்டுமா ?

ன்று ஒரு நாள் குமுதினி அவளைப் பார்க்க வந்திருந்தாள். அவள் பள்ளிக்கூடத்தில் படித்தபோதே மிக நன்றாகப் பாடுவாள். அதற்காகப் பரிசும் வாங்கியிருக்கிறாள். இன்னும் இரண்டு நாளில் ஒரு விழா அந்தப் பள்ளிக்கூடத்தில் நடக்கப் போகிறது. அதில் குமுதினியைப் பாடச் சொல்லலாம் என்று எண்ணினாள். தன் விருப்பத்தைக் குமாரி அவளிடம் கூறினாள்.

“நீங்கள் சொன்னால் வரமாட்டேனா அம்மா ? ஆனால்...” அவள் சிறிது தயங்கினாள்; “அவரிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்து சொல்கிறேன்” என்றாள். அப்படிச் சொன்னபோது அவள் முகத்தைப் பார்த்தாள் குமாரி. அடிமை, எசமானுக்குப் பயந்து சொல்வது போலவா அவள் சொன்னாள்? அவள் முகத்தில் ஒரு பெருமிதம், ஒரு நிறைவுதான் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/114&oldid=1384103" இலிருந்து மீள்விக்கப்பட்டது