பக்கம்:கோயில் மணி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவு

111

அவர் பிரம்மசரியாகவே இருந்திருந்தால்? இந்தப் பருவம் அல்லாத பருவத்தில் தான் ஆசைப்படுவது தவறு என்று தோன்றினாலும், வேண்டுமென்றே யாரோ ஒருவர் ஆசை காட்டி மோசம் செய்தது போன்ற ஏமாற்றம் உண்டாயிற்று, என்ன என்னவோ எண்ணினாள். இப்போது மற்றொரு யோசனை தோன்றியது. பிரமசாரியாக இல்லாவிட்டால், என்ன? அவருக்கு மனைவி இல்லை; அவளும் தனி.

இந்த எண்ணத்தை வளர்த்து இன்புற்றாள். அதற்கும் ஒரு தடை எழுந்தது. அவருக்கு எத்தனை குழந்தைகளோ? அவள் குழந்தை பெற்று இறந்தாள் என்று சொன்னார். இந்தக் குழந்தைக்கு முன் எத்தனை குழந்தைகளோ?

இந்தக் கேள்விக்கு உடனே விடை தெரிந்து கொள்ள வேண்டுமென்று துடித்தாள். அந்த நள்ளிரவில் ஓடிச் சென்று, “உமக்கு எத்தனை குழந்தைகள்” என்று கேட்பதா?

பொழுது விடிந்தது. அன்று அவர் வரவில்லை. அவளுக்கு உடனே உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் அளவுக்கு மிஞ்சி எழுந்தது. அவரைத் தேடிக்கொண்டே போனாள். அவள் அங்கே போனது அதுதான் முதல் முறை.

வீட்டை அவர் எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தார்: அவள் போனபோது அவர் குழந்தைக்குக் கதை சொல்லிச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். வீட்டில் யாரோ ஒரு வேலைக்காரன் மட்டும் இருந்தான்.

போனவுடனே கேட்பாளா? ஏதோ சந்தேகம் கேட்பவளைப் போல வந்தாள். உண்மையான ஐயங்களையும் பேச்சுப் போகிற போக்கிலே தெரிந்து கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/117&oldid=1384111" இலிருந்து மீள்விக்கப்பட்டது