பக்கம்:கோயில் மணி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலர்ச்சி

119

வந்தால் தோட்டவேலை பார்க்கலாம் என்று அழைத்தார். அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு நாங்கள் இருவரும் அங்கே போய்ச் சேர்ந்தோம்.”

“அங்கே வசதியாக இல்லையா?”

“சொல்கிறேன், கேளுங்கள். போன புதிதில் எல்லாம் நன்றாகவே இருந்தன. மாமனுக்கு ஒரு பெண் உண்டு. அவளை இவருக்குக் கொடுக்க வேணுமென்பது அவருடைய ஆசை. இவர் என்னைக் கட்டிக்கொள்ளவே, அந்தப் பெண்ணை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்கள். மாமனுக்கு இவரிடத்திலே பிள்ளைபாசம். ஆனால் அவருடைய பெண்சாதிக்கு இவரைக் கண்டால் ஆகிறதில்லை. போய் ஒரு வருஷம் ஒரு சங்கடமும் இல்லாமல் இருந்தது. எங்களுடைய போதாத காலம், மாமனுக்குப் பாரிசவாயு வந்து படுத்த படுக்கையாகிவிட்டார். இனி மேல் எல்லாம் நீயே கவனித்துக் கொள் அப்பா என்று இவரிடம் சொல்லிவிட்டார்.”

“ஏன், அவனுக்குப் பிள்ளை குட்டி இல்லையா?”

“ஒரு பெண், ஒரு பிள்ளை, பெண்ணைத்தான் கட்டிக் கொடுத்துவிட்டார். மகன் சின்னப் பிள்ளை. மாமன் நினைத்தபடி ஒன்றும் நடக்கவில்லை. அவர் உடம்பில் வலிமையுடன் ஓடி ஆடி உழைத்தபொழுது அவர் பேச்சுக்கு மதிப்பு இருந்தது. கீழே படுத்தபிறகு அந்த மதிப்பு வர வரப் போய்விட்டது. அவருடைய மனைவி அதிகாரம் செய்ய ஆரம்பித்தாள். இவர் ரோசக்காரர். ஒரு பெண்பிள்ளை அதிகாரம் பண்ணுகிறதாவது என்று மனசுக்குள் வருத்தம். கொஞ்ச நாளில் அந்த அம்மாள் தன் மாப்பிள்ளையையே வருவித்துக்கொண்டாள். இவர் குறிப்பு அறிந்து மெல்ல நழுவிவிட்டார்.”"

“மாமன் ஒன்றும் சொல்லவில்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/125&oldid=1384135" இலிருந்து மீள்விக்கப்பட்டது