பக்கம்:கோயில் மணி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலர்ச்சி

121

“என்ன சொல்கிறாய்?”

“ஒன்றும் இல்லை அம்மா. நீங்கள் முன்போல் என்னிடம் பூ வாங்கமாட்டீர்கள் என்று தோன்றுகிறது.”

“ஏன், வேறு யாராவது கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறாயா?”

“இல்லை அம்மா, நீங்களே இத்தனை பூச்செடிகள் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிரியமான மல்லிகைச் செடிகள் நன்றாக வளர்ந்திருக்கின்றன. நீங்கள் விலைக்குப் பூ வாங்கவேண்டிய அவசியம் இல்லையே”

அவள் சொன்னது உண்மைதான், நான் இப்போ தெல்லாம் பூ வாங்குவதே இல்லை. ஏதாவது விசேஷ காலங்களில் செவ்வந்தி, ரோஜாப்பூக்களே வாங்குவேன். எங்கள் வீட்டில் நாலு வகையான மல்லிகையையும் பயிரிட்டிருந்தேன்.

எனக்கு ஆசை, கண்படும் இடம் எல்லாம் பூவாகக் குலுங்கவேண்டுமென்று. இந்த வீட்டுக்கு வந்த புதிதில் தோட்டம் போடுவதுதான் என் வேலை. இவர் கம்பெனியில் காவலாளி முனிசாமியைக் கூப்பிட்டு ஊரில் இருக்கிற செடிகளையெல்லால் வாங்கி வரச்சொல்லிவிட்டேன்.

எருவென்று வீதியில் எந்த வண்டி போனாலும் வாங்கிக் கொட்டுவேன். “அந்த எருவைத் தொட்ட கையோடு சமையல் செய்யப் புகுந்துவிடாதே” என்று இவர் பரிகாசம் செய்வார்.

முல்லை, இருவாட்சி, ஜாதி, நித்தியமல்லிகை, ஊசிமல்லிகை, குண்டுமல்லிகை என்று மல்லிகைத் திணிசுகளாக வாங்கிவைத்தேன். நர்ஸரிக்களுக்கு நேரிலே போய்ப் பூஞ்செடிகளைப் பார்த்து வாங்கி வந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/127&oldid=1384142" இலிருந்து மீள்விக்கப்பட்டது