பக்கம்:கோயில் மணி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



122

கோயில் மணி

புதிய வீட்டுக்கு வந்து ஆறு மாசம் தோட்டவேலை மும்முரமாக நடந்தது. தெரியாமலா சொன்னர்கள், ‘நட்டதெல்லாம் மரமாகுமா? பெற்றதெல்லாம் பிள்ளேயாகுமா?’ என்று? சில செடிகள் வளர்ந்தன. சில செடிகள் பட்டுப்போயின. கம்பெனி வேலைக்காரன், முனிசாமி. அவன் நினைத்தால் வருவான்; பல நாள் வராமலே இருந்துவிடுவான். இவ்வளவுக்கும் அவனுக்குத் தனியே இதற்காகப் பணம் கொடுத்தேன்.

ஆரம்பத்தில் எவ்வளவு உற்சாகம் இருந்ததோ, அது வர வரக் குறைந்தது. முதலில் கண்ட செடிகளையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து வைத்தேன். எனக்குத் தெரிந்தவர்கள் மிகவும் தாராளமாகப் பல செடிகள் தந்தார்கள். ஒரு பிரயோசனமும் இல்லாத செடிகளெல்லாம் காடாக மண்டின. மல்லிகைச் செடிகள் நிதானமாகவே வளர்ந்தன. பாரிஜாத மரம் மாத்திரம் நன்றியுள்ள வேலைக்காரனைப்போல வஞ்சகமின்றிப் பூவைச் சொரிந்தது.

புதுவிட்டில் தனியாகப் பூசைக்கென்று ஒரு பெரிய அலமாரி அமைக்கச் செய்தேன். விக்கிரகங்களும் படங்களுமாக அதை நிரப்பினேன். மல்லிகைச் செடிகள் சில மலர்ந்தன. ஒவ்வொரு நாளும் காலையில் பவள மல்லிகை, செம்பருத்தி, மல்லிகை, முல்லை இவற்றைப் பறித்துத் தொடுத்துப் பூசை அலமாரியில் உள்ள படங்களை அலங்கரிப்பதுதான் முக்கியமான வேலையாகப் போய்விட்டது. செவ்வந்திப்பூவும் ரோஜாப்பூவும் இருந்தால் நிறநிறமாக இருக்கும் என்று அந்தச் செடிகளை வாங்கி வைத்தேன். செவ்வந்திச் செடி காடுபோல் கிளைத்தது; பூவே பூக்கவில்லை. ரோஜாச்செடியோ வாடவும் இல்லை; வளரவும் இல்லை; பூவும் இல்லை; மலடியாக நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/128&oldid=1384145" இலிருந்து மீள்விக்கப்பட்டது