பக்கம்:கோயில் மணி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோயில் மணி

7

“இவ்வளவு செய்தவன் அதையும் தெரிவிப்பான் என்றே நினைக்கிறேன். ஒரு வாரம் பொறுங்கள்” என்றார் சாமிநாத குருக்கள்.


3

ன்று சாமிநாத குருக்கள் தர்மகர்த்தாக்களை யெல்லாம் வரச்சொன்னார். ஊரில் பெரிய மனிதர்களுக்கு ஆள்விட்டு அழைக்கச் சொன்னார். சுப்பிரமணியசுவாமி கோயில் பூசகராகிய முத்துசாமி குருக்களையும் வரும்படி சொல்லியனுப்பினார். எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். குருக்கள் கண்களில் நீர் வரப் பேசலானார். “நாம் ஒன்று நினைக்கப் பரமசிவன் ஒன்று நினைத்திருக்கிறான். இந்தக் கோயிலில் மணியைக் கட்டவேண்டு மென்று எல்லோரும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். சிவபெருமான் வேறு வகையாக உத்தரவு பண்ணியிருக்கிறான்.”

“என்ன, என்ன?” என்று பல குரல்கள் ஒருங்கே எழும்பின.

“ஆண்டவன் தனக்கு அந்த மணி வேண்டாம் என்றும் கலியுக தெய்வமாகிய தன் குமரன் திருக்கோயிலில் அதைக் கட்டவேண்டுமென்றும் என் கனவில் நேற்று வந்து கட்டளையிட்டான். அவன் திருவுள்ளம் அப்படி இருக்கும்போது நாம் என்ன செய்வது?”

முருக முதலியார் இப்போது பழைய குரலில் பேசினார்; “சந்தியாகால பூசையைச் சரியாகச் செய்யும் இடத்துக்கு ஆண்டவன் பரிசை அனுப்புகிறான். கிருஷ்ணன் பாரிசாத மரத்தைச் சத்தியபாமா வீட்டில் நட, அது ருக்மிணி வீட்டில் பூத்தது மாதிரி ஆயிற்றுக் கதை” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/13&oldid=1382747" இலிருந்து மீள்விக்கப்பட்டது