பக்கம்:கோயில் மணி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலர்ச்சி

125

“என்ன அது?”

“எங்களுக்குக் கிடைக்கிறது எங்கள் இரண்டு பேருக்கும் குழந்தைகளுக்கும் சில சமயங்களில் போதுவதில்லை. உழைக்கிறவளுக்குக் கால் வயிறு கஞ்சியாவது கிடைக்காமல் போனால் எப்படி உழைக்க முடியும்? நானாவது குறைத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. அவளுக்கு அது தெரியக்கூடாது. இதற்கு என்ன வழி என்று பார்த்தேன். நானே சமைக்கிறேன் என்று, அதற்குச் சில பொய்க்காரணங்களைச் சொல்லி அவளைச் சம்மதிக்கச் செய்தேன். அவள் வருவதற்கு முன் நானும் குழந்தைகளும் சாப்பிட்டுவிடுவோம். வந்ததும் அவள் தனக்கு வைத்திருப்பதைச் சாப்பிடுவாள். சில நாள் அரிசி போதுமான அளவு கிடைக்காது. அப்போது நான் சாப்பாட்டைக் குறைத்துக்கொள்வேன்; கஞ்சியை வடித்துக் குடிப்பேன்...”

எனக்கு உள்ளம் உருகியது. கண்ணில் நீர் மல்கியது.

“ஏன் உனக்கு வேலை கிடைக்கிறதில்லை?”

“அது எனக்கு எப்படித் தெரியும் அம்மா? முன் போல் என்னல் உழைக்க முடிகிறதில்லை. ஆனாலும் ஏதோ தோட்டவேலை செய்வேன்; வேறு ஏதாவது சில்லறை வேலை செய்வேன். என்னைக் கண்டால் யாருக்கும் வேலை செய்வேனென்று நம்பிக்கை உண்டாவதில்லையோ, என்னவோ? எதற்கும் முகராசி வேண்டாமா, அம்மா?”

அவனுடைய வார்த்தைகள் என்னை உருக்கி விட்டன. “இந்தா, இந்த இரண்டு ரூபாயை வைத்துக் கொள்” என்று கொடுக்கப்போனேன். அவன் வாங்கிக் கொள்ளவில்லை. “பட்டினி கிடக்க உடம்பில் வலு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/131&oldid=1384155" இலிருந்து மீள்விக்கப்பட்டது