பக்கம்:கோயில் மணி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

கோயில் மணி

யைப் பற்றி எழுதுவது என்று தீர்மானமாக வேண்டும். அதற்கு...”

இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு குழந்தை அழுதுகொண்டே வந்தது. நளினிக்கு அதைக் கண்டவுடன் கோபம் வந்துவிட்டது. “எப்போதும் அழுகைதானா? ஏ வள்ளி, உனக்குக் குழந்தையைச் சமாதானப் படுத்தவே தெரியவில்லை. இங்கே வாடா ராஜா!” என்று அழைத்தாள்.

“நான் மாத்தேன் போ! எனக்கு அந்தக் கத்தி வேணும். ஆயாவைக் கேக்கறேன். நீ போ” என்று ஆயா வள்ளியிடம் ஓடி ஓவென்று கத்தியது. குழந்தைக்கு நாலு வயசு இருக்கும். மழலைச் சொல்லிலே பேசியது.

“என்ன அம்மா பண்ணுவேன்? எங்க வூட்டுப் புள்ளை அன்னிக்கு இங்கே வந்தபோது ஒரு கத்தியைக் கொண்டாந்தான். அதைப் பார்த்ததிலேருந்து அது வேணுமுன்னு கத்துது கொளந்தை. வேறு ஏதாவது வாங்கித் தரேன்னாலும் கேக்கமாட்டேனுங்குது.”

“சரி சரி; எப்படியாவது சமாதானம் செய்துகொள். எனக்கு நேரம் ஆகிறது... என்ன, சாப்பாடு தயாரா?” என்று கூவினாள் நளினி.

“ஓ! அரை மணிக்கு முன்பே தயார்” என்று உள்ளிருந்து குரல் வந்தது.

நளினி சாப்பிட உட்கார்ந்தாள். அவசர அவசரமாகச் சோற்றை வாயிலே போட்டுக் கொண்டாள். நடு நடுவே பேசினாள். “இந்தா, அவர் வந்தால், இன்று முழுவதும் கார் எனக்கு வேண்டும் என்று சொல், அவரை டாக்ஸி எடுத்துக்கொண்டு போகச் சொல். இப்போது அவர் எங்கே போயிருக்கிறார், தெரியுமோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/140&oldid=1384215" இலிருந்து மீள்விக்கப்பட்டது