பக்கம்:கோயில் மணி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுறவு

139

கிடைக்கிறது மிகவும் அரிது என்பதும் தெரியும். புதிய ஆளைக் கூட்டிவந்து அவளைக் காவல் காப்பதென்றால் நடக்கிற காரியமா? ஆகவே ஒருவிதமாக வள்ளிக்கு இணங்கினாள்: "இந்தா, இதுதான் சாக்கென்று நீ வீட்டிலேயே இருந்துவிடாதே குழந்தைக்கு அங்கே ஒன்றும் கொடுத்துவிடாதே” உடம்புக்கு வந்துவிடும். எப்போதாவது அவசியமாக நீ போகவேண்டுமானல் போ. அப்போது இவன் வருவான் என்று பிடிவாதம் பிடித்தால் அழைத்துக்கொண்டு போ. இல்லையானால் வேண்டாம். சமையல்கார அம்மாளிடம் சொல்லிப் பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறேன். அவள் பார்த்துக் கொள்வாள். என்ன, நான் சொல்கிறது. தெரிகிறதா?”

“சரி அம்மா!”

குழந்தை மோகன் ஆயாவிடம் ஒட்டிக் கொண்டவன். கதை சொல்லிப் பாட்டுச் சொல்லிக் கன்னத்தில் முத்தமிட்டுச் சோறூட்டிப் படுக்கவைத்துத் தாலாட்டுப் பாடி வளர்க்கிறவள் அவள். அம்மா என்று நளினி பேருக்குத்தான் இருந்தாள். எப்போதாவது, “என் ராஜா இங்கே வா!” என்பாள். அநேகமாக ராத்திரி வேளைகளில் சமையல்காரி பக்கத்திலேதான் அவன் தூங்குவான். இப்போது வள்ளியின் வீட்டுக்கு அவன் போனான். அங்கே உள்ள குழந்தைகளோடு விளையாடினான். அதனால் வள்ளியின் பிணைப்புப் பின்னும் இறுகலாயிற்று.

நாராயணன் இப்போதெல்லாம் மாசத்தில் பாதி நாள் சுற்றுப் பிரயாணத்தில் இருந்தார். இன்று டில்லி, நாளை கல்கத்தா, மறுநாள் லண்டன்—இப்படி அவர் விமானத்தில் பறந்தார். நளினியோ காரில் பறந்தாள். அன்னைமார் சங்கத்துக் கூட்டத்தில் நளினி குழந்தை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/145&oldid=1384222" இலிருந்து மீள்விக்கப்பட்டது