பக்கம்:கோயில் மணி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோயில் மணி

9

“நீங்கள் சொல்வதெல்லாம் சுவாமி சொல்வதாகவே நான் எண்ணுகிறேன் ; நீங்கள் கட்டளையிடுவது போலவே செய்கிறேன்” என்றார் முத்துசாமி குருக்கள்.

அன்று முதல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாயரட்சை அபிஷேகம் தொடங்கும்போது மணி அடிக்கும். அது சாமிநாத குருக்கள் காதில் விழும். சிவன் கோயிலிலும் அபிஷேகம் தொடங்குவார். எல்லாவற்றையும் முடித்துவிட்டு அங்கே கர்ப்பூர ஆரத்திமணி அடிக்கிறபோது கணக்காக இங்கும் தீபாராதனை செய்வார்.

முருக முதலியார் குறை இப்போது தீர்ந்துவிட்டது. இரண்டு கோயில்களிலும் சந்தியா காலத்தில் தவறாமல் பூசை நிகழ்ந்தது. ஒருநாள் கோயிலுக்கு வந்தவர் சிரித்துக்கொண்டே, “கடிகாரம் ஒடினாலும் ஓடா விட்டாலும் சந்தியா கால பூசை இப்போதெல்லாம் கணக்காக நடந்து வருகிறதே!” என்றார்.

“ஆமாம்! தெரியாமலா சுவாமி மணியை அந்தக் கோயிலில் கட்டச்சொன்னார்?” என்று சாமிநாத குருக்கள் சொன்னார்.

“நீங்கள் செய்த தியாகம் அது” என்று சொல்ல முதலியாருக்கு வாய் வரவில்லை. ரோசம் தாங்காமல், ஆதிமுதலே அந்தக் கோயிலில் மணிகட்ட வேண்டுமென்று சங்கற்பித்துக்கொண்டு, அதைச் சிவபெருமான் கட்டளையாகச் சொல்லித் தம் காரியத்தைச் சாமிநாத குருக்கள் முடித்துக்கொண்டதை முதலியார் அறிந்தால், குருக்களுடைய தியாகத்தை மெச்சியிருப்பாரோ என்னவோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/15&oldid=1382752" இலிருந்து மீள்விக்கப்பட்டது