பக்கம்:கோயில் மணி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒட்டுறவு

145

டாக்டர் இப்போதுதான் வந்து இஞ்செக்சன் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். “அதிகமாகக் கூட்டம் வேண்டாம். குழந்தைக்கு யார் பிரியமோ அவர்மட்டும் அருகில் இருக்கட்டும்” என்று சொல்லிப் போனார்.

நளினியும் இப்போது வாட்டமுற்றிருக்கிறாள். “என் ராஜா, என் ராஜா”. என்று புலம்பத் தெரிகிறதே ஒழியக் குழந்தைக்கு என்ன செய்தால் அநுகூலம் என்று தெரியவில்லை. தன் மடியில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவனே ஆயாவிடந்தான் இருக்க வேண்டுமென்று கத்தினான். அவனைப் படுக்கையில் விட்டு விட்டு வள்ளியம்மாள் அருகில் நின்றாள். நளினி குழந்தையின் அருகில் அமர்ந்துகொண்டு மெல்ல வருடத் தொடங்கினாள். குழந்தை மயக்கமாகக் கண்ணை மூடிக்கொண்டிருந்தான். நளினி மெல்லக் குழந்தையை அணைத்துக்கொண்டாள். அவளுக்கு அப்போது சொல்ல முடியாத இன்பம் உண்டாயிற்று; அடுத்தபடி எதையோ நினைத்துக் கொண்டு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

குழந்தை கண்ணை விழித்துக்கொண்டு, “ஆயா! ஆயா!” என்று கத்தினான். “இதோ, நான் அம்மா இருக்கிறேன், ராஜா!” என்று குழைந்து பேசினாள் நளினி.

“ஆயா! ஆயா! அம்மா வாண்டாம்.”

நளினிக்கு இப்போது அந்த வார்த்தை உயிர்க் குலையிலே பாய்ந்தது. தன்மேலேயே எரிச்சல் வந்தது.

வள்ளி கையில் ஹார்லிக்ஸைக் கொண்டு வந்து நளினியிடம் கொடுத்தாள். குழந்தை குடிக்கமாட்டேனென்று பிடிவாதம் செய்தான். வள்ளியே அதை ஊட்டினாள்.

கோயில்-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/151&oldid=1384237" இலிருந்து மீள்விக்கப்பட்டது