பக்கம்:கோயில் மணி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

கோயில் மணி

ஒரு கணம் தலை நிமிர்ந்தான். உடனே குனிந்து கொண்டான்.

அந்த ஒரு கணந்தான் மாஜிஸ்டிரேட் அந்த முகத்தைப் பார்த்தார். அவரே ஐந்து நிமிஷம் தடுமாறிப் போனார், பிறகு விசாரணையை முடித்துக் கொண்டார்.

அடுத்த நாள் தீர்ப்புக் கொடுத்தார், மாஜிஸ்டிரேட் “குற்றவாளி முதல் முறையாகத் திருடியிருக்கிறானென்று தோன்றுகிறது. திருடுவது தவறு என்பதை உணர்ந்து வருத்தப்படுகிறான், பத்து நாள் ரிமாண்டில் இருந்திருக்கிறான். இந்தத் தண்டனையே போதும் என்று நினைக்கிறேன். இப்போது இவனுக்கு இருநூறு ரூபாய் அபராதம் விதிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “மற்ற வழக்குகளையெல்லாம் நாளை ஒத்திவைக்கிறேன்” என்று கூறி, விரைவாக வீட்டுக்குப் புறப்பட்டு விட்டார்: போகும்போது போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தனியே அழைத்து ஏதோ சொன்னர்.

மாலை ஐந்து மணிக்கு மாஜிஸ்டிரேட் தம் வீட்டில் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மணி ஐந்தரை ஆயிற்று. இன்ஸ்பெக்டர் வந்தார்: “அந்த மனிதன் இங்கே வரமாட்டேன் என்கிறான் வருவதை விட உயிரை விட்டுவிடுகிறேன் என்கிறான்” என்றார்.

“அபராதத்தைக் கட்டியாகி விட்டதா?”

“நீங்கள் பணத்தைத் தந்தவுடனே ஒரு கான்ஸ்டபிளிடம் கொடுத்துக் கட்டச் சொல்லிவிட்டேன். அந்த ஆளையும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று நீராடச் செய்து, புது வேட்டியையும் கொடுத்தேன். அவன் லேசில் வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு விதமாகக் கட்டிக் கொள்ளச் சொல்லிச் சாப்பாடும் போடச் சொன்னேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/154&oldid=1384244" இலிருந்து மீள்விக்கப்பட்டது