பக்கம்:கோயில் மணி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மாடு மேய்க்கும் கண்ணன்

“அம்மா, கண்ணன் குண்டு மூஞ்சியா, கறுப்பாத் தானே இருப்பான்?”.

“ஆமாம்; ஆனால் அழகாக இருப்பான்.”

“அவன் மாடுகளை மேய்க்கிறவன்தானே, அம்மா?”

“ஆமாம்; ஆனால் ரொம்பக் கெட்டிக்காரன்.”

கேள்வி கேட்கிறவன் குழந்தை ராமு. பதில் சொல்கிறவள் அவனுடைய அம்மா அம்புஜம்.

கல்யாண நகரில் ஒரு பஜனை சபை இருக்கிறது. சனிக்கிழமைதோறும் அங்கே பஜனை நடக்கும். மார்கழி மாசம் தினந்தோறும் விடியற் காலையில் வீதியில் பஜனை நடைபெறும். மார்கழி முடிந்து தை பிறந்தால் அந்த மாசம் முதலில் ராதா கல்யாணம் நடத்துவார்கள்.

ஒரு வாரம் ராதா கல்யாண உற்சவம், பேச்சு, பஜனை, கதா காலட்சேபம் இப்படி வைபவமாக இருக்கும். கடைசி நாளன்று ராதா கல்யாணம் பஜனைப் பத்ததியின்படி நிகழும், நகரத்தில் உள்ள பாகவத கோஷ்டிகள் அத்தனையும் இந்த உற்சவத்தில் கலந்து கொள்ளும். சனிக்கிழமை இரவு அகண்ட பஜனையும், ஞாயிற்றுக்கிழமை ராதா கல்யாணமும் வைத்துக் கொள்வது வழக்கம். சனிக்கிழமை மாலையிலேயே பாகவதர்கள் கல்யாண நகரில் கூடிவிடுவார்கள். பஜனை சபை இருக்கும் வீதி முழுவதும் அடைத்துப் பந்தல் போட்டிருப்பார்கள். சனிக்கிழமை விடிய விடியப் பஜனை. பாகவதர்களுக்கு அன்று இரவே இல்லை; தூக்கமும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/16&oldid=1382756" இலிருந்து மீள்விக்கப்பட்டது