பக்கம்:கோயில் மணி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கோயில் மணி

ராதா கல்யாணத்தில் ஒரு நாள் ராமு வீட்டு மண்டபப்படி. அவன் வீட்டில் சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம் எல்லாம் பண்ணினார்கள். பஜனைக் கூடத்துக்குக் கொண்டு வந்து நிவேதனம் செய்து எல்லோருக்கும் வழங்கினார்கள். அன்று காத்தான் என்ன காரணமோ வரவில்லை. ராமுவுக்கு அவனைக் காணாமல் துயரம் பொங்கி எழுந்தது. தங்கள் வீட்டுப் பிரசாதங்களை அவனுக்குக் கொடுக்க முடியவில்லையே என்று ஏங்கினான். தெய்வமாகிய கண்ணன் நிச்சயமாக அந்தப் பிரசாதத்தை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டான் என்று அவனுக்குத் தோன்றியது; இந்தக் கண்ணனுக்குக் கிடைத்தால்தான் அந்தக் கண்ணனுக்கு, சாமியாகிய கண்ணனுக்கு, திருப்தி உண்டாகும் என்று அவனுக்கு ஓர் எண்ணம்.

“அம்மா, கண்ணனுக்குக் கொஞ்சம் வடை கொடு; நான் போய்க் கொடுத்துவிட்டு வருகிறேன்” என்றான் குழந்தை.

“அது யாருடா கண்ணன்?” என்றாள் தாய்.

“அதுதான் குண்டு மூஞ்சியா, கறுப்பா, மாடு மேய்க்கிறானே, அந்தக் கண்ணன்.”

“அது யார்? எங்கே இருக்கிறான்?”

“அதோ அந்தச் சேரியில் இருக்கிறானாம்; விசாரித்துக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருகிறேன்.”

அம்புஜத்துக்குக் கோபம் கோபமாக வந்தது; “போடா, அசடு! அவன் இங்கே வந்து வாங்கிக் கொள்ளட்டும்; நீ அங்கெல்லாம் போகக்கூடாது.”

ஆனாலும் குழந்தை மனம் கேட்கவில்லை. ஒருவருக்கும் தெரியாமல் இரண்டு வடையை எடுத்து மறைத்து வைத்திருந்தான். ஒருவரும் தன்னைப் பாராத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/20&oldid=1382761" இலிருந்து மீள்விக்கப்பட்டது