பக்கம்:கோயில் மணி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாடு மேய்க்கும் கண்ணன்

15

சமயத்தில் சேரியை நோக்கிப் புறப்பட்டுவிட்டான் குழந்தை. பிற்பகல் மூன்று மணி. அம்புஜம் குழந்தையைப் பார்த்தாள்; காணவில்லை. வீதியில் விளையாடிக் கொண்டிருப்பான் என்று எண்ணிப் போய்ப் பார்த்தாள்; காணவில்லை. சின்ன வீதியாகையால் ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து பார்த்தாள்: காணவில்லை.

அவருக்குப் பகீரென்றது. குழந்தை எங்கே? அவன் கையில் தங்க வளை இருந்தது. பத்திரிகைகளில் வந்த செய்திகளெல்லாம் அவள் நினைவுக்கு வந்தன. “ஐயோ! கடவுளே! என் குழந்தையைக் காப்பாற்று!” என்று கதறினாள். தெரிந்தவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் தேடினார்கள்.

காரியாலயத்துக்குப் போன அம்புஜத்தின் கணவர் நாராயணனுக்குச் செய்தி போயிற்று. அவரும் ஓடி வந்தார்.

ராமு சேரிக்குள்ளே நுழையும்போது குழந்தைப் புத்தியில் போய்விட்டான். முன்னே வந்தது இல்லை. அங்கே அவன் கண்ணனைக் காண அல்லவா புறப்பட்டிருக்கிறான்? ஏதோ பேச்சு வாக்கில் அந்தக் சேரியிலே தான் இருப்பதாகக் காத்தான் சொல்லியிருக்கிறான். அதைக் கேட்டுவைத்துக்கொண்டு குழந்தை வந்து விட்டான். எங்கே யென்று தேடுவது?

அவன் கையில் வடை இருப்பதைக் கண்டு ஒரு நாய் அவனிடம் வந்து குரைத்தது. குழந்தை பயந்து போய் ஓடினான். நாய் துரத்தியது. கையிலுள்ள வடையைப் போட்டுவிட்டு ஓடினான். ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டான். நாய் வடையைக் கவ்விக் கொண்டு ஓடிப்போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/21&oldid=1382762" இலிருந்து மீள்விக்கப்பட்டது