பக்கம்:கோயில் மணி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாடு மேய்க்கும் கண்ணன்

17

“அம்மா, அம்மா, அப்படிச் சொல்லாதே! அந்தக் கண்ணன் ரொம்ப நல்லவன் அம்மா!”

இடையிலே நாராயணன் வந்தார்: “என்னடி அம்புஜம், குழந்தை ஏற்கனவே அரண்டு போயிருக்கிறான் நீ வேறு இப்படி உருட்டுகிறாய்” என்று சொல்லிக் குழந்தையை அழைத்துக்கொண்டு மாடிக்குப் போய்விட்டார்.

“நீ எங்கேயப்பா போயிருந்தாய்?“ என்று அவர் கொஞ்சியவாறே தம் குழந்தையைக் கேட்டார்.

குழந்தை பேசவில்லை.

“சொல், அப்பா! நானும் உன்னோடு வருகிறேன். போகலாம். எங்கே போனாய்?” என்று மறுபடியும் கேட்டார்.

“கண்ணனைப் பார்க்கப் போனேன்.”

“யார் அது, கண்ணன்?”

“அதுதான் குண்டு மூஞ்சியா, கறுப்பா, அழகாய், நல்லவனாய், சிரிப்பானே அவன்.”

“இது என்ன இவன் சொல்லுகிறான்! இவன் சாட்சாத் கண்ணபிரானையே தேடிக்கொண்டு போனானோ!” அவருக்கு உடம்பு புல்லரித்தது.

“அவன் எங்கே இருக்கிறான்? என்ன செய்கிறான்”

“அவனும் மாடு மேய்க்கிற கண்ணன்தான்.”

“இதென்ன இவன் குழந்தை வார்த்தையாகப் பேசவில்லையே!—” அவர் புரிந்து கொள்ளாமல் தடுமாறினார்.

அப்போது காபி கொண்டு வந்த அம்புஜம், “என்ன சொல்கிறான் குழந்தை?” என்று கேட்டாள்.

கோயில்—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/23&oldid=1382765" இலிருந்து மீள்விக்கப்பட்டது