பக்கம்:கோயில் மணி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாடு மேய்க்கும் கண்ணன்

21

இலையில் போட்டு,“கண்ணா, தின்னு' என்றான் அருகில் உள்ள குழந்தைகளெல்லாம் அதைக் கண்டன. “டேய் எனக்குடா, எனக்குடா?” என்ற ஆரவாரம் எழுந்தது.

பரிமாறுகிறவர்கள் என்ன ஆரவாரம் என்று பார்த்தார்கள். ராமு குஞ்சாலாடைக் காத்தானுக்குப் போட்டான் என்று தெரிந்தது.

“ஏய், என்னடா போக்கிரி! நீ ஏன் இங்கே வந்தாய்? உன் அம்மாவிடம் சொல்கிறேன் பார்” என்று ராமுவை மிரட்டினார்கள். யாரோ போய், “உங்கள் ராமுவைப் பாருங்கள்; வீதியிலே சேரிக் குழந்தைகள் சாப்பிடும் இடத்தில் வந்து ரகளை பண்ணுகிறான்” என்று சொன்னார்கள்.

அவள் வீதிக்கு வந்தாள். ராமு நிற்கும் இடத்துக்குப் போனாள், “இங்கே என்னடா வேலை?” என்று கேட்டாள்.

அவன் தன் சிறுகையால் வெள்ளை உள்ளத்தோடு, “இதோ என் கண்ணன்” என்று காத்தானைச் சுட்டிக் காட்டினான்.

அவ்வளவுதான்; அம்புஜத்துக்குப் பொங்கி வந்தது கோபம். பாவம் அந்தப் பையன் பாதி சாப்பிட்டுக் கொண்டிருப்பதையும் கவனிக்கவில்லை; பலர் அங்கே இருக்கிறார்கள் என்பதையும் நோக்கவில்லை. தன் பிள்ளையைக் கொல்லத் துணிந்த கொலைகாரனைக் கண்டவளைப் போல ஆத்திரத்துடன் இரண்டு கைகளையும் ஓங்கிப் பளாரென்று காத்தான் முதுகில் அறைந்தாள். தரதர வென்று ராமுவை இழுத்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்தாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த காத்தான் வீரென்று கத்தினான். அங்கே நின்றிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/27&oldid=1382772" இலிருந்து மீள்விக்கப்பட்டது