பக்கம்:கோயில் மணி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழைய குருடி

குவளைவித்தை என்று கேட்டிருக்கிறீர்களா ? செப்பிடுவித்தை என்று கேட்டிருப்பீர்கள். அதை விடப் பெரிய வித்தை இது. இதைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் தயைசெய்து சென்னைக்கு வந்து யாராவது ஒரு பால்காரரிடம் சில காலம் குருகுல வாசம் செய்யுங்கள். அந்த வித்தையில் பயிற்சி பெறலாம். அந்த வித்தையில் தண்ணீர் பாலாக மாறும்!

நான் ஏதோ கற்பனை செய்து சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். ஏதோ மாயவித்தைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். காசு கொடுத்துப் போய்ப் பார்க்கிறார்கள். சென்னையில் வீட்டு வாசலில் வந்து பால்கறக்கும் மாயா ஜாலக்காரர்களிடம் இல்லாத வித்தை அங்கே என்ன இருக்கிறது ?

விடியற்காலையில் நான்கு மணிக்கு எங்கள் வீட்டுப் பால்காரர், “பால் அம்மா!” என்ற திருப்பள்ளியெழுச்சியுடன் வந்து குரல் கொடுப்பார். அதைக் கேட்டவுடன் என் மனைவி பரபரவென்று படுக்கையிலிருந்து எழுந்து சென்று, அந்த மங்கலான ஒளியில் வாசலில் நிற்கும் எருமை மாட்டின் முகத்தில் விழிப்பாள். எருமை மாடு என்றால் வசவுக்குப் பேர்போன சொல்; புராணத்தை நம்புகிறவர்களுக்கு எமனுடைய வாகனம். அதன் முகத்தில் காலையில் விழிப்பதைப் பற்றி என் மனைவி கவலைப்படுவதில்லை. காபி குடிப்பவர்களுக்கு எருமைப் பால்தான் அந்த அமுதத்தைத் கெட்டியாக்குவது என்று தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/31&oldid=1382791" இலிருந்து மீள்விக்கப்பட்டது