பக்கம்:கோயில் மணி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழைய குருடி

27

பையனை அனுப்பிக் கெஞ்சி அவர் கொடுத்த பாலை வாங்கிக் கொண்டு வந்து காபி போட்டுக் குடித்தோம்.

பாலில் தண்ணீர் கலக்கும் மாயத்தைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும் சுத்தப் பால் அல்ல என்று மட்டும் எப்படியோ தெரிந்து விடுகிறது. சில நாள் நல்ல பாலே கிடைத்து விடுகிறது. அதைப் பார்த்தால் பலநாள் மாதத்துக்கு இருபத்தைந்து நாட்கள், தண்ணீர்ப் பாலையே குடிக்கிறோம் என்று தெளிவாகத் தெரிகிறது.

பால்காரர் வந்து கறக்காமல் ஆள்காரனை விட்ட போதெல்லாம் வீட்டு வாசலில் கத்தல், சண்டை, இரைச்சல்தான். விடியற்கால வேளையில் மனிதன் சுகமாகத் தூங்கும்போது, இந்த இரைச்சலைக் கேட்டு எரிச்சல் வருமா, வராதா, சொல்லுங்கள்.

ஆனாலும் என்ன பண்ணுவது? காபிக்கு அடிமையாகிப் போனவர்களுக்கு வேறு கதி ஏது? அரசியலார் பத்திரிகையில் தாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் பாற் பண்ணைகளைப் பற்றிப் புள்ளி விவரங்களை வெளியிடுகிறார்கள். அந்தப் புள்ளிக் கணக்கு எங்கள் வீட்டுக் காபிக்கு உதவுவதில்லை. அந்தப் பண்ணையைப் பற்றித் தெரிந்து கொண்டு சீட்டு வாங்கிப் பால் வாங்குவதற்குள் புலிப்பாலையே கொண்டு வந்து விடலாம்.

ஒரு நாள் பால்காரர் சண்டை கடுமையாகப் போய் விட்டது. நான் இன்துயிலை விட்டு எழுந்து வந்து கடாபுடா என்று ஏதோ பேசிவிட்டேன். அன்று பால்காரர் சத்தியாக்கிரகம் செய்து விட்டார். நாங்கள் கடையிலிருந்து காபி வாங்கி வந்து சாப்பிட்டோம். அப்படி நாள்தோறும் செய்தால் குடித்தனம் உருப்படுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/33&oldid=1382786" இலிருந்து மீள்விக்கப்பட்டது