பக்கம்:கோயில் மணி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போடாத செருப்பு

சுவாமி, தாங்கள் சந்தியாசியாக இருந்தும் ஒரு கிருகஸ்தர் படத்தை வைத்துப் போற்றுகிறீர்கனே!” என்று கேட்டேன்; முத்தானந்த சுவாமிகளிடந்தான் கேட்டேன்.

அவர் புன்முறுவல் பூத்தார். “சாதி, சமயம், ஆசிரமம் ஆகிய இவை அன்புக்கு முன் நிற்பதில்லை. அதுவும் நன்றியறிவும் கலந்து கொண்டால், நிச்சயமாக இந்த வேறுபாட்டுக்கு இடமே இல்லை” என்றார்.

அவர் சந்தியாசிதான்; ஆனால் எப்போதும் நிஷ்டையிலே இருந்து கொண்டு உலகத்திலே ஊடாடாமல் இருக்கிறவர் அல்ல. ஒரு சின்ன ஆசிரமம் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார். தலை மொட்டை, கழுத்தில் ருத்திராட்சம்; இடையில் நாலு முழ வெள்ளை வேட்டி; நெற்றியில் எப்போதும் திருநீறு துலங்கும். அவர் வைத்தியத்தில் கிடைக்கும் பொருளைக் கொண்டு, பிறர் கையை எதிர்பாராமல் தம்முடைய ஆசிரமத்தை நடத்தி வந்தார். பண வரவு செலவுக் கணக்கை நம்பிக்கையான ஓர் ஆசாமியிடம் விட்டு விட்டார். மருந்து சாமான்கள் வாங்குவது, சாமியாருக்கு உணவு ஏற்பாடு செய்வது முதலிய எல்லாக் காரியங்களும் அவர் பொறுப்பில்தான் இருந்தன. ஆகவே முத்தானந்தர் காசைக் கையில் தொடாமல், துறவியாகவே இருந்து வந்தார். காலை மாலைகளில் தியானம் செய்வார். இரவு நேரங்களில் பிள்ளைகளைப் பஜனை செய்யச் சொல்லிக் கேட்பார். அவரும் கூடப் பாடுவார். அவருடைய ஒவ்வொரு நாள் வேலை முறையும் இவ்வளவுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/44&oldid=1382814" இலிருந்து மீள்விக்கப்பட்டது