பக்கம்:கோயில் மணி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போடாத செருப்பு

39

அவருடைய முகத்தில் ஒரு பொலிவு இருந்தது. கண்ணில் ஓர் ஒளி இருந்தது. அவரிடம் பேசும் பொழுது யாருக்கும் மிக மிக நல்லவர் ஒருவரோடு பேசும் உணர்ச்சியே உண்டாகும்.

படத்தைப் பற்றிக் கேட்ட எனக்கு அவர் அன்பு, நன்றியறிவு என்று காரணம் சொன்னார். “இவரிடம் உங்களுக்கு அன்பும் நன்றியறிவும் இருக்கின்றன என்று உங்கள் பதிலிலிருந்து ஊகிக்கிறேன். அதற்குக் காரணம் ஏதாவது இருக்க வேண்டுமே!” என்றேன்.

“நான் இன்று பரதேசியாக இருந்தாலும், பிறருடைய பொருளை ஒரு வேலையும் செய்யாமல் பெறுவதில்லை. ஏதோ வைத்தியம் என்ற சிறிய உபகாரத்தைச் செய்து பெறுகிறேன். அந்த வைத்தியத்தைச் சொல்லித் தந்தவர் இந்த மாசிலாமணி முதலியார். வைத்தியத்தை நான் வைத்திருக்கும் வரையிலாவது இந்தப் படத்தை வைத்திருக்க வேண்டாமா?”

“நல்ல காரணந்தான். இந்தக் காலத்தில் யார் நன்றியை நினைக்கிறார்கள்?”

“நினைக்காதவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் நினைப்போமே! நன்றியை நினைக்கிறது என்று சொல்லும் போது எனக்கு ஒரு பெரிய கதை நினைவுக்கு வருகிறது. அந்தக் கதைக்கு அடையாளமாக ஒரு பொருளை வைத்திருக்கிறேன். அதை நீங்கள் பார்த்தால் மிகவும் ஆச்சரியம் அடைவீர்கள். இந்தப் படத்தைக் கண்டு நீங்கள் கேள்வி கேட்டீர்கள். அதைக் கண்டுவிட்டாலோ நீங்கள் பிரமித்துப் போவீர்கள். கொஞ்சம் இருங்கள். அதைக் கொண்டு. வருகிறேன்” என்று அருகில் இருந்த அறைக்குள் போனார் முத்தானந்தர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/45&oldid=1382819" இலிருந்து மீள்விக்கப்பட்டது