பக்கம்:கோயில் மணி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கோயில் மணி

வின் குடிசைக்கு வந்து குழந்தையை விட்டு விட்டுப் போனார்.

அது முதல் அந்தக் குழந்தையிடம் குப்புசாமிக்கு ஒரு பாசம் விழுந்துவிட்டது. அந்தப் பக்கம் வரும்போதெல்லாம், குப்புசாமி அந்தக் குடிசைக்கு வந்து, குழந்தையைக் கண்டு சிறிது நேரம் கொஞ்சிவிட்டே போவார். வரும் போது, கையில் குழந்தைக்குப் பிஸ்கோத்தோ, பழமோ கொண்டு வருவார். அவருக்கு வயசு கிட்டத் தட்ட அறுபது இருக்கும். காளிமுத்துவின் மனைவி அவரை அண்ணன் முறை வைத்துப் பேசுவாள். நாளடைவில், அவர் அந்தக் குடும்பத்தின் நெருங்கிய உறவினரைப் போல ஆகிவிட்டார்.

காளிமுத்துவின் மனைவி வேலை செய்து கொண்டிருந்த வீடு ஒரு பெரிய செல்வர் வீடு. அவள் அந்த வீட்டு அம்மாளிடம் சிபாரிசு செய்து குப்புசாமியிடம் காய்கறி வாங்கும்படி செய்தாள். அந்த அம்மாளுடைய தயவால் இன்னும் பலருடைய வாடிக்கையும் அவருக்குக் கிடைத்தது. “தங்கச்சி, உன்னாலே என் வியாபாரம் பெருகிப் போயிற்று” என்று அடிக்கடி அவர் சொல்வார்.

காளிமுத்து மிகவும் சிக்கனமாக வாழ்கிறவர். தம் குடிசையைத் தாமே கட்டிக் கொண்டார். அதற்கு ஆன செலவைத் தம்முடைய வருவாயிலிருந்தே செய்தார். அநாவசியச் செலவு என்பதே அவரிடம் இல்லை.

ஒரு நாள் குப்புசாமி வந்தபோது, காளிமுத்து வேலைக்குப் போயிருந்தார். குடிசைக்குள் அவருடைய செருப்புக் கிடந்தது. குப்புசாமி காளிமுத்து மனைவியிடம், “அவர் பாங்கிக்குப் போகவில்லையா?” என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/48&oldid=1382829" இலிருந்து மீள்விக்கப்பட்டது