பக்கம்:கோயில் மணி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போடாத செருப்பு

45

காளிமுத்து, வெறுங்காலோடு தம் கடமையை ஆற்றப் போய்விட்டார்.

“அண்ணாத்தை, இது என்ன அதிசயமாய் இருக்கிறது! அன்று பழஞ் செருப்புப் போன விதமும் தெரியவில்லை. இன்று புதுச் செருப்பு வந்த விதமும் தெரிய வில்லை” என்று காளிமுத்து மனைவி சொன்னாள்.

குப்புசாமி சிரித்துக் கொண்டார்; “தம்பி வெறுங்காலோடு நடக்கிறதைக் கண்டு எனக்குக் கஷ்டமாக இருந்தது. அந்தப் பழஞ் செருப்புப் போய்விட்டால், புதுச் செருப்பு வாங்குவார் என்று நான்தான் அதைத் திருடிக் கொண்டு போனேன். அவர் வாங்கவில்லை. சரி, புதுச் செருப்பு வாங்கி வைத்துவிடலாம் என்று நானே வாங்கிக் கொண்டு வந்து, வைத்தேன். இப்போது இதைப் போட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறார்!”

“அதென்ன அண்ணாத்தை, நியாயமான காரியமா? நீங்கள் எதற்குக் கையிலிருந்து பணம் போட்டுச் செருப்பு வாங்க வேணும் நம் குழந்தைக்குப் பிஸ்கோத்து, மிட்டாய் என்று அடிக்கடி வாங்கித் தருகிறீர்கள். அந்தச் செலவோடு இது வேறா”

“இதெல்லாம் ஒரு செலவா? உன்னால் எனக்கு எத்தனை கிராக்கி கிடைத்திருக்கிறது, தெரியுமா?. அதற்கெல்லாம் கமிஷன் போட்டுக் கொடுக்கிறதென்றால், மாசத்துக்கு ஒரு புடைவை வாங்கிக் கொடுக்க வேண்டும். அது கிடக்கட்டும் தங்கச்சி. எப்படியாவது இந்தச் செருப்பை அவர் போட்டுக் கொள்ளும்படி செய்தால் உனக்குக் கோடி புண்ணியம் உண்டு.”

“அவரைப் பற்றி உங்களுக்கு ஏன் அவ்வளவு அக்கறை?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/51&oldid=1382839" இலிருந்து மீள்விக்கப்பட்டது