பக்கம்:கோயில் மணி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

கோயில் மணி

“எனக்கு வியாபாரம் பெருக நீயும் உன் குழந்தையும் காரணம். ஏதாவது பதில் உபகாரம் செய்ய வேண்டுமென்று எண்ணினேன். கொஞ்ச காலமாவது நிற்கிற சாமானாக வாங்கித் தர வேண்டுமென்று நினைத்தேன். அப்போது அந்தப் பழஞ் செருப்பு என் கண்ணில் பட்டது. உடனே இந்த யோசனை செய்தேன். அவர் இந்தச் செருப்பைப் போட்டுக்கொண்டு நடந்தால் நான் பட்ட கடன் தீர்ந்ததுபோல இருக்கும். தங்கச்சி, எனக்காக அவரிடம் வாதாடிப் பாரேன்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் குப்புசாமி.

“பார்க்கிறேன்” என்று சொல்லியனுப்பினாள் அவள்.

அவள் காளிமுத்துவிடம் சொல்லிச் சொல்லிப் பார்த்தாள். குப்புசாமி நன்றியறிவு காரணமாக அதைத் தந்திருக்கிறார் என்பதையும், எப்படியாவது அது பயன்பட வேண்டுமென்று அவர் ஏங்கியிருப்பதையும் சொன்னாள். காளிமுத்து கேட்கவில்லை. “அடி பைத்தியக்காரி, வேறு ஒருவர் இரங்கித் தந்தால் அதை வாங்கிக் கொள்ளலாமா? அது கெளரவப் பிச்சைக்குச் சமானம். அவசியமாக இருத்தால், கொஞ்சம் பணம் சேர்த்து நாமே வாங்கிக் கொண்டால் போகிறது. நான் அந்தப் புதுச் செருப்பை நிச்சயமாகக் காலில் போட்டுக்கொள்ள மாட்டேன்!” என்று சொல்லிவிட்டார்; “அதை அப்படியே அவரை எடுத்துக் கொண்டு போய் விடச் சொல் வேறு யாருக்காவது கொடுக்கட்டும்” என்றார்.

“இதை உங்கள் காலுக்காகவே அளவெடுத்துச் செய்யச் சொன்னாராம்.”

“எனக்குத் தெரியாமல் அவர் எப்படி அளவெடுத்தார்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/52&oldid=1382841" இலிருந்து மீள்விக்கப்பட்டது